புதுடெல்லி: கடந்த 13 ஆண்டுகளாக சுயநினைவின்றி போராடி வரும் 31 வயது இளையரான ஹரீஷ் ராணா என்பவரைக் கருணைக் கொலை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் படித்துவந்தார். ஒரு விடுதியில் தங்கி படித்துவந்த நிலையில், கடந்த 2013ஆம் ஆண்டு அந்த விடுதியின் நான்காவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார் ஹரீஷ்.
இதில், அவரது மூளையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சுயநினைவின்றி ‘கோமா’ நிலைக்குச் சென்றார் அந்த பரிதாபத்துக்குரிய இளையர்.
அதன் பிறகுதான் அவரது பெற்றோருக்குப் போராட்டம் தொடங்கியது. உயிருடன் போராடிய மகனைக் காப்பாற்ற பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டனர். எதிலும் பலனில்லை.
சுவாசிப்பதற்காக ஒரு குழாய், உடலுக்குள் உணவு செலுத்த மற்றொரு குழாய் என்ற மருத்துவக்கருவிகள் மட்டுமே ஹரீஷின் உடலில் உயிர்தங்க உதவின. இல்லையெனில் அவரை ஒரு தாவரம் என்று குறிப்பிட்டுவிடலாம்.
இந்நிலையில், தங்கள் மகனுக்குப் பொருத்தப்பட்டுள்ள உயிர் காக்கும் கருவிகளை அகற்ற அனுமதி கோரி அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
இந்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த திறமையான இளையரை ஒரு விபத்து தாவரத்தைப் போல் வாழ வைத்துவிட்டது என்றும் 13 ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இல்லை என மருத்துவ அறிக்கை குறிப்பிடுகிறது என்றும் தெரிவித்தனர்.
“உயிர் காக்கும் சாதனங்களை அகற்றுவதற்கு இரண்டு அடிப்படைகள் இருக்க வேண்டும். அந்த நடவடிக்கை, மருத்துவச் சிகிச்சையாகக் கருதப்பட வேண்டும். அது நோயாளியின் சிறந்த நலனுக்கானதாக இருக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

