கோட்டா: ராஜஸ்தானின் கோட்டா நகரில் போட்டித்தேர்வுக்காகப் பயிற்சி பெறும் மாணவர்களில் சிலர் தங்கள் உயிரை மாய்த்துகொள்வது ஏன் என உச்சநீதிமன்றம் ராஜஸ்தான் அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் இருக்கும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ, நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் அதிகமாக கோட்டாவில் உள்ளன. நாடு முழுவதிலுமிருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அண்மை காலமாக இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களில் சிலர் தங்கள் உயிரை மாய்த்துகொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்தாண்டு மட்டும் இதுவரை 14 மாணவர்களின் உயிர் பறிபோயின.
இதுதொடர்பான வழக்கில் ராஜஸ்தான் மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளது.
நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர், தமது பெற்றோருடன் கோட்டாவில் வசித்து வந்த நிலையில் அண்மையில் தமது உயிரை மாய்த்துகொண்டார். ஆனால் காவல்துறை இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. அதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, ஆர். மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “கோட்டா நகரில் மட்டும் மாணவர்கள் இறப்பது ஏன்? மாநில அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? மாணவர்கள் உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் தொடர்பாக ஏன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது இல்லை? அதற்கான காரணம் என்ன?” என நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
மேலும் கோட்டா நகரில் மாணவர்களின் உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் தொடர்பாக ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா,“ராஜஸ்தானில் மாணவர்கள் அதிகமாக உயிரை மாய்த்துகொள்வது மிகவும் தீவிரமான பிரச்சினை. இதுதொடர்பாக மாநில அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பெற்றோர்கள் கல்வி தொடர்பாகத் தங்கள் குழந்தைகள்மீது அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம். அதேபோல பயிற்சி நிலையங்களும் மாணவர்களுக்கு அதிக மன அழுத்தம் தரக்கூடாது,” எனக் கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அச்சம்பவங்கள் தொடராமல் பார்த்துக்கொள்வதில் அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவும் தேவை” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

