பெங்களூரில் ‘பாகிஸ்தான்’: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

பெங்களூரில் ‘பாகிஸ்தான்’: உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

2 mins read
91755d87-904c-4442-81d2-249f7087a5cc
சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பெங்களூரு மாநகரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை ‘பாகிஸ்தான்’ எனக் குறிப்பிட்ட கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா என்ற அந்நீதிபதி, பெண் வழக்கறிஞர் ஒருவர் குறித்தும் அருவருக்கத்தக்க வகையில் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

நில உரிமையாளர் - குத்தகைதாரர் தொடர்பான வழக்கின்போது, பெங்களூரில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியை ‘பாகிஸ்தான்’ என ஸ்ரீஷானந்தா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், பெண் வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையான வழக்கு விசாரணையின்போது, எதிர்த்தரப்பு குறித்து அப்பெண் அதிகம் அறிந்துவைத்துள்ளதுபோல் தெரிகிறது என்றும் அவர்களின் உள்ளாடை நிறங்களைக்கூட அவர் சொல்லக்கூடும் என்றும் ஸ்ரீஷானந்தா கூறியிருந்தார்.

இவ்விரு சம்பவங்கள் தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவின.

இதனையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதியின் சர்ச்சைக் கருத்து தொடர்பில் உச்ச நீதிமன்றம் தானாக விசாரிக்க முடிவுசெய்தது.

இதன் தொடர்பில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எஸ். கண்ணா, பி.ஆர். கவாய், எஸ். காந்த், எச். ராய் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) காலை கூடியது.

நீதிபதி ஸ்ரீஷானந்தாவின் சர்ச்சைக் கருத்து தொடர்பில் இரண்டு நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.

நீதிமன்றங்களில் கருத்துக் கூறும்போது நீதிபதிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை உறுதிசெய்ய வேண்டிய தேவை குறித்தும் அவர்கள் வலியுறுத்தினர்.

வரும் 25ஆம் தேதி புதன்கிழமை இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்