தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விளம்பரங்களுக்குத் தடை: பாஜகவின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

1 mins read
b53e799f-f789-45a5-b604-08506e1b08b0
இந்திய உச்ச நீதிமன்றம். - படம்: ஊடகம்

புதுடெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜகவின் விளம்பரங்களுக்குக் கோல்கத்தா உயர் நீதிமன்றம் விதித்த தடையுத்தரவில் தலையிட முடியாது என்று திங்கட்கிழமையன்று (மே 27) உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் தொண்டா்களுக்கும் எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி நாளிதழில் பாஜக விளம்பரம் வெளியிட்டதாக குற்றஞ்சாட்டி கடந்த வாரம் கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த ஒருநபர் நீதிபதி, ஜூன் 4ஆம் தேதிவரை அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை பாஜக விளம்பரங்களை வெளியிடத் தடைவிதிப்பதாகத் தீர்ப்பளித்தார்.

இதனையடுத்து, அத்தடையை எதிர்த்து பாஜக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

பாஜகவின் மனுவை ஏற்றுக்கொண்டு அவசர வழக்காக விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மகேஸ்வரி, விஸ்வநாதன் ஆகியோா் தலைமையிலான அமா்வு, “விளம்பரங்களை நாங்களும் பார்த்தோம், அவை இழிவுபடுத்தும் விதமாகவே உள்ளன. மேலும், இதுபோன்ற விஷயங்களை ஊக்குவிக்க நாங்கள் விரும்பவில்லை,” எனக் கூறிவிட்டனர்.

மேலும், அவை வாக்காளர்களின் நலன் சார்ந்த விளம்பரங்கள் அல்ல என்றும் இப்பிரச்னையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்ட பாஜக தரப்பு வழக்கறிஞர், கோல்கத்தா உயர்நீதிமன்றத் தனி நீதிபதி அமர்வில் முறையிடுவதாகத் தெரிவித்தார்.

அதன்படி கோல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அவ்வழக்கை விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்து, ஒருநபர் நீதிபதியிடமே கோரிக்கைகளை முன்வைக்கும்படி அறிவுறுத்தினர்.

குறிப்புச் சொற்கள்