புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கல்வித்துறையில் பணியமர்த்தப்பட்ட 25,753 ஆசிரியர்கள், பிற ஊழியர்களின் நியமனத்தை ரத்துசெய்த கோல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (ஏப்ரல் 3) உறுதிப்படுத்தியது.
ஒட்டுமொத்த ஆட்சேர்ப்புச் செயல்முறையும் தில்லுமுல்லு, மோசடித்தனத்தால் சீர்குலைக்கப்பட்டது என்றும் அதன் நம்பகத்தன்மையும் சட்ட முறைமையும் சிதைக்கப்பட்டது என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற ஆணையில் தலையிட எந்தக் காரணமும் இல்லை என்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் இடம்பெற்ற அமர்வு தெரிவித்துவிட்டது.
மேலும், ஏமாற்று, மோசடி வழிமுறைகளால் பணி நியமனங்கள் இடம்பெற்றன என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
அத்துடன், மூன்று மாதங்களுக்குள் அப்பணியிடங்களுக்கான புதிய தேர்வுச் செயல்முறையை முடிக்குமாறும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதிய செயல்முறையில் வெற்றிபெறுவோர், கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் பெற்ற ஊதியத்தைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லை. அதே நேரத்தில், தோல்வியடைவோர் சம்பளம் முழுவதையும் திருப்பிச் செலுத்த வேண்டும்.
உடற்குறையுற்றோர்க்கு விதிவிலக்கு அளித்துள்ள உச்ச நீதிமன்றம், அவர்கள் இப்போதுள்ள பணியிலேயே தொடர அனுமதித்துள்ளது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மேற்கு வங்க அரசு, நேர்மையாகப் பணியில் சேர்ந்தவர்களையும் மோசடிப் பேர்வழிகளையும் இனங்கண்டு பிரிக்க வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
மிகையான பணியிடங்கள் உருவாக்கப்பட்டது இவ்விவகாரத்தில் முக்கியமாகப் பார்க்கப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த மாநிலந்தழுவிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் 2.3 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மொத்தம் 24,640 காலிப் பணியிடங்கள் இருந்த நிலையில், 25,753 நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன. சட்டவிரோத ஆட்சேர்ப்பால் கூடுதல் பணியிடங்கள் உருவாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பில், அம்மாநிலத்தின் முன்னாள் கல்வியமைச்சர் பார்த்தா சட்டர்ஜி உட்பட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ஆயினும் அதனை அமல்படுத்துவோம் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒரு சிலரின் தவற்றுக்காக ஏன் இத்தனை பேரும் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய அவர், “இதனால் 25,000 பே மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவர்,” என்றார்.