புதுடெல்லி: வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தொடரப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
வக்ஃபு வாரியத் திருத்த மசோதாவுக்கு எதிராக வழக்குத் தொடர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே அறிவித்து இருந்த நிலையில், காங்கிரசும் இதே முடிவை எடுத்துள்ளது.
“வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா, இஸ்லாமியர்களின் நலனுக்கு எதிரானது,” என மல்லிகார்ஜுன கார்கே கருத்து தெரிவித்துள்ளார்.
வக்ஃபு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது ஒரு ‘திருப்புமுனை தரும் தருணம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
“இது முஸ்லிம் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும். வக்ஃபு சொத்துகளை நிர்வகிப்பதில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும். குறிப்பாக, நீண்ட காலமாக விளிம்பு நிலையில் இருந்தவர்களுக்கு உதவும்,” என்று பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டிற்காக தாய்லாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி டுவிட் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா வியாழக்கிழமை காலை நிறைவேற்றப்பட்ட நிலையில், மேல்சபையில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) காலை இம்மசோதா குறித்து வாக்கெடுப்பு நடத்தி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சி.ஏ.ஏ. 2019, தகவல் அறியும் உரிமை திருத்தச் சட்டம், தேர்தல் நடத்தை விதிகளில் கொண்டுவந்த திருத்தங்கள், வழிபாட்டுத் தலங்கள் திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
“அதேபோல், வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராகவும் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடர உள்ளது.
“இந்திய அரசியலமைப்பு கொள்கைகள், நடைமுறைகள், செயல்பாடுகள் மீதான மோடி அரசின் அனைத்து தாக்குதல்களையும் நாங்கள் நம்பிக்கையுடன் எதிர்க்கிறோம், தொடர்ந்து எதிர்ப்போம்,” என்று அவர் கூறியுள்ளார்.