புதுடெல்லி: கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்குத் தொடர்பில் குற்றவாளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை (ஏப்ரல் 28) உறுதி செய்தது.
கடந்த 2003ல் கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் முந்திரிக்காடு பகுதியில் காது, மூக்கில் நஞ்சு ஊற்றிக் கொல்லப்பட்ட கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கடந்த 2021ஆம் ஆண்டு கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்பில், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டியனுக்குத் தூக்குத் தண்டனையும் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் மருதுபாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
அத்துடன், 12 பேரின் ஆயுள் தண்டனையும் உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து தண்டனை பெற்ற கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதன்படி, கண்ணகியின் அண்ணன், தந்தை, காவல்துறை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 13 பேரின் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
ஆணவக் கொலையின் பின்னணி
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 25. பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த இவர் இளங்கலைப் பொறியாளர் படிப்பு படித்தவர். இவரும் அதே பகுதியில் உள்ள வேறு பிரிவைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகள் கண்ணகி, 22, காதலித்து 2003ல் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ரகசியத் திருமணம் செய்துகொண்டு, மாயமாகிவிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கண்ணகியின் உறவினர்கள் முருகேசன்-கண்ணகியைக் கண்டுபிடித்து, இருவரையும் அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களது மூக்கு, காது வழியாக விஷத்தை ஊற்றி கொலை செய்தனர். பின்னர், சடலங்களை எரித்தனர். இது ஆணவக் கொலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து சில நாள்களுக்குப் பிறகு இச்சம்பவம் ஊடகங்களில் வெளியானது.
அதன்பின்னர் விருத்தாசலம் காவலர்கள் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, முருகேசன், கண்ணகி ஆகியோரின் தரப்பிலிருந்து தலா நான்கு பேரைக் கைது செய்தனர்.
கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனையும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலிஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதே சமயம் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.
ஏற்கெனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
இதனையடுத்து, இந்தத் தண்டனையை எதிர்த்துக் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது.