சமூக ஊடகங்களைப் பயன்படுத்த சிறார்களுக்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

1 mins read
f11f9dc2-73b1-471a-9c05-3ef227fc8f66
ஜெப் அறக்கட்டளை சார்பில் மோகினி பிரியா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தால் செய்திருந்தார். - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பதிமூன்று வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்க இயலாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இது தொடர்பாக, ஜெப் அறக்கட்டளை சார்பில் மோகினி பிரியா என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சிறார்கள் அதிக அளவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதாகவும் வயது சரிபார்ப்பு முறை, உயிரி தொழில்நுட்பம் (பயோமெட்ரிக்) போன்ற முறைகளைப் பயன்படுத்த மத்திய அரசு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், குழந்தைகள் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை பின்பற்ற தவறும் சமூக ஊடகங்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும் என மோகினி பிரியா வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனுவை விசாரிக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்துவிட்டது.

“இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விஷயம். இதுகுறித்து மனுதாரர் மத்திய அரசுக்கு மனு செய்து, நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர வேண்டுகோள் விடுக்கலாம். அந்த மனு சட்டப்படி 8 வாரங்களுக்குள் பரிசீலிக்கப்படும்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்