தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நடிக்கப் போகிறேன், அமைச்சர் பொறுப்பு வேண்டாம்: சுரே‌ஷ் கோபி

1 mins read
0dc03cb0-36d6-46d6-b929-792cc8c89461
சுரே‌ஷ் கோபி. - படம்: english.mathrubhumi.com / இணையம்

புதுடெல்லி: மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) நாடாளுமன்ற உறுப்பினருமான சுரே‌ஷ் கோபி தாம் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி மீண்டும் நடிக்கச் செல்ல விரும்புவதாக மறுபடியும் கூறியுள்ளார்.

தமது சம்பளம் குறைந்திருப்பது, குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றவேண்டியது ஆகியவை அதற்கான காரணங்கள் என்று அவர் சொன்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. திரு கோபி, பாஜகவின் முதல், கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்றக் கீழவை உறுப்பினராவார்.

மலையாளத் திரையுலகில் பல காலமாகப் பிரபல நடிகராகத் திகழ்ந்த அவர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் சதானந்தன் மாஸ்டரின் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) திறந்து வைத்தபோது பேசினார்.

திரு கோபி, ‘தீனா’ உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

திரு கோபி, தாம் வகிக்கும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுலாத் துறை மத்தியத் துணை அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலக விரும்புவதாக ஏற்கெனவே கூறியிருக்கிறார்.

நடிப்பில் தமக்கு இருக்கும் ஆர்வமும் திரைப்படங்களில் தாம் நிறைவேற்றாத பணிகளும் அதற்குக் காரணங்கள் என்று அவர் கூறியிருந்தார்.

கடந்த 2016ஆம் ஆண்டில் சுரே‌ஷ் கோபி பாஜகவில் சேர்ந்தார். கலைத் துறைக்கு ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரமாக அந்த ஆண்டு அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக மொழியப்பட்டார்.

பிறகு நாடாளுமன்றக் கீழவை, சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்ற அவர், 2024 நாடாளுமன்றக் கீழவைத் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் வெற்றிபெற்றார்.

குறிப்புச் சொற்கள்