சென்னை: உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுவனின் மர்ம உறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பிரபலமான தனியார் மருத்துவமனை உள்ளது. இதில் உதட்டில் ஏற்பட்ட வீக்கத்துக்காக 9 வயது சிறுவன் ஒருவன் அனுமதிக்கப்பட்டான்.
அந்தச் சிறுவனுக்கு மருத்துவரும் தாதியரும் சிகிச்சை அளித்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் சிறுவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அப்போதுதான் அவனுக்கு உதட்டில் ஏற்பட்ட காயத்துக்காக ஆண் உறுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சிறுவன் தனது பெற்றோரிடம் அதைக் காண்பித்து கதறி அழுதான். உடனே பெற்றோரும், உறவினர்களும் இம்மாதம் 24ஆம் தேதி இரவு சம்பந்தப்பட்ட மருத்துவமனை முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து ஐஸ்ஹவுஸ் காவலர்கள் விரைந்து வந்து போராட்டக்காரர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் ஐஸ்ஹவுஸ் காவலர்கள் வழக்கு பதிவு செய்து மருத்துவர், செவிலியரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.

