தருமபுரி: கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் செவ்வாய்க் கிழமை (ஆகஸ்டு 4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.
கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து இம்மாதம் முதல் தேதி காலையில் நொடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்துவிடப்பட்டது. பின்னர் பகலில் 10,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.
அன்று நள்ளிரவில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கபினி அணைக்கான நீர்வரத்துக்கு ஏற்ப காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவிலும் ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வந்தன.
இவ்வாறு திறக்கப்பட்ட உபரி நீர் 3ஆம் தேதி மாலையில் தமிழக எல்லையான ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலு வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வறட்சியால் காவிரியாறு காய்ந்து கிடந்த நிலையில் நீர்வரத்து ஒகேனக்கல்லை வந்தடைய கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு 4) அதிகாலையில் உபரிநீர் ஒகேனக்கல் அடுத்த பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காலை 6 மணியளவில் பிலிகுண்டுலுவில் நொடிக்கு 1,000 கன அடியாக நீர்வரத்து பதிவானது. மேலும் நீர்வரத்து சீராக உயர்ந்து வருகிறது.
இதற்கிடையே ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி புதிய மஞ்சள் கயிற்றில் திருமாங்கல்யம் அணிந்து பெண்கள் வழிபாடு நடத்தினர்.
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று ஆடிப்பெருக்கு, ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும்.
தண்ணீர்ப் பஞ்சம், உணவுப் பஞ்சம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பூசை செய்து மக்கள் வழிபடுவார்கள்.
அந்த வகையில் தமிழகத்தில் திங்கட்கிழமை திருச்சி காவிரிக் கரையில் இந்த விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
திருச்சியைத் தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி, மதுரை வைகை ஆற்றங்கரையிலும் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
சென்னையைப் பொறுத்தவரை மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் திங்கட்கிழமை திருமணமான பெண்கள், புத்தாடை உடுத்தி பழைய தாலிக் கயிற்றுக்குப் பதிலாகப் புதிய மஞ்சள் கயிற்றில், திருமாங்கல்யம் அணிந்து வழிபாடு செய்தனர். மேலும் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட பல கோயில் குளங்களிலும் மக்கள் வழிபட்டனர்.

