திருவனந்தபுரம்: நடிகர்கள் மம்மூட்டி, பிரித்விராஜ், துல்கர் சல்மான் வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 23) சோதனை நடத்திய நிலையில், துல்கர் சல்மானின் இரு கார்களைப் பறிமுதல் செய்தனர்.
முறையாக வரி செலுத்தாமல் உயர் ரக கார்களை இறக்குமதி செய்யும் முறைகேடுகளைக் கண்டறிய ‘ஆபரேஷன் நம்கூர்’ என்ற பெயரில் நாடெங்கும் பல்வேறு இடங்களில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளா, லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில், கேரளாவில் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கொச்சியின் பணம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மான், பிரித்விராஜ், எலம்குளத்தில் உள்ள மம்மூட்டி வீடுகளில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீரெனச் சோதனை நடத்தினர்.
பூட்டான் நாட்டின் வழியாக கார் இறக்குமதி செய்தததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து துல்கர் சல்மானின் பெயரில் உள்ள லேண்ட் ரோவர் டிஃபென்டர் கார் உள்பட இரு கார்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். கார் வாங்கியதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்தின் முக்கிய கார் விற்பனைக் கூடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.
மோட்டார் வாகனத் துறையுடன் ஒருங்கிணைந்து சுங்க அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
விசாரணையில், எட்டு வகையான சொகுசு வாகனங்கள் பூட்டான் வழியாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்த நடவடிக்கையின் வழிமுறை, வாகனங்களை இமாச்சலப் பிரதேசத்தில் பதிவு செய்து, பின்னர் இந்தியா முழுவதும் கொண்டு செல்வதை உள்ளடக்கியது, பெரும்பாலும் அவற்றின் தோற்றத்தை மறைக்கப் பதிவு எண்களை மாற்றியமைத்துள்ளது.
ஆவணங்கள், பதிவு நடைமுறைகள், போக்குவரத்து வழித்தடங்களில் கவனம் செலுத்தி, இந்த நடவடிக்கை பல கட்டங்களாக நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.