தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
பாதுகாப்பை உறுதிசெய்ய இந்திய ரயில்வே பெரிய அளவிலான நடவடிக்கை

அனைத்து இந்திய ரயில்கள், ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள்

2 mins read
d1fa8dab-703d-467b-9157-4f57b3ef23b4
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு பெரிய நடவடிக்கையாக, ரயில் பெட்டிகளிலும், ரயில் என்ஜின்களிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவ முடிவு இந்திய ரயில்வே செய்துள்ளது. 74,000 பயணிகள் பெட்டிகள், 15,000 ரயில் என்ஜின்களில் கண்காணிப்பு கேமராக்களை சோதனை முறையில் நிறுவியதன் நேர்மறையான விளைவின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. - படம்: இணையம்

புதுடெல்லி: இந்தியாவின் அனைத்து ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் உயர் தொழில்நுட்பக் கண்காணிப்பு கேமராக்களை (சிசிடிவி) இந்திய ரயில்வே நிறுவ உள்ளது.

அதன் ஒட்டுமொத்தக் கட்டமைப்பிலும் கண்காணிப்பையும் பயணிகளின் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் கிட்டத்தட்ட 74,000 பயணிகள் ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றிலும் நான்கு டோம் வகை கேமராக்கள் பொருத்தப்படும். 15,000 ரயில் என்ஜின்கள் ஒவ்வொன்றிலும் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

ரயில் பயணிகளின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில் கதவுகளுக்கு அருகில் உள்ள பொதுவான பகுதியில் கண்காணிப்புகேமராக்கள் நிறுவப்படவிருக்கின்றன.

இரண்டு நுழைவுப் பகுதிகளிலும் இரண்டு பொதுவான பகுதிகளிலும் இவை இருக்கும் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

அந்த உயர் தொழில்நுட்ப கேமராக்கள் வழி குறைந்த வெளிச்சத்திலும் அதிவேக நடவடிக்கைகளின் போதும் தெளிவான காட்சிகளைப் படம்பிடிக்க முடியும். இது உள் பாதுகாப்பை வலுப்படுத்துகிறது.

கண்காணிப்பு கேமராக்கள் பயணிகளுக்குக் குற்றம், திருட்டுக்கு எதிராகப் பாதுகாப்பை வழங்கும் ஒரு தடுப்பாகச் செயல்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த முயற்சி பயணிகளின் நம்பிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் பெட்டிகள், ரயில் என்ஜின்களில் வெற்றிகரமான சோதனைத் திட்டத்திற்குப் பிறகு அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது

ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணியின் முன்னேற்றத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ரயில்வே இணையமைச்சர் ரவ்னீத் சிங், ரயில்வே வாரியத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் ஜூலை 12ஆம் தேதி ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்களில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டை ஆராயுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாடு தழுவிய சீற்றத்தைத் தூண்டிய பானிபட்டில் நடந்த அதிர்ச்சியூட்டும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்த நிலையில், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அச்சம்பவத்தில் ஒரு பெண் காலியான பெட்டிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, தண்டவாளத்தில் வீசப்படுவதற்கு முன்பு கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்