மும்பை: மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி பத்து நாள்களைக் கடந்துவிட்ட போதிலும் அங்கு புதிய அரசாங்கம் அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.
டிசம்பர் 5ஆம் தேதி (வியாழக்கிழமை) புதிய முதல்வர் பதவி ஏற்பார் என்றும் மும்பையில் உள்ள ஆசாத் திடலில் பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்பு விழா நடைபெறும் என்றும் பாஜக தரப்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
ஆயினும், யார் அந்த முதல்வர் என்ற மர்மம் நீடித்து வருகிறது.
பாஜகவின் முடிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (அஜித்) அஜித் பவார் ஆதரவளிக்கும் அதேவேளை, சிவசேனாவின் (ஷிண்டே) ஏக்நாத் ஷிண்டே முரண்டு செய்வதாகக் கூறப்படுகிறது.
கூட்டணிக் குழப்பத்தைத் தீர்க்க, மகாராஷ்டிராவுக்கான பாஜகவின் மேலிடப் பார்வையாளர்களாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தலைமையில் புதன்கிழமை (டிசம்பர் 4) மகாராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்றும் இதில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், மகராஷ்டிர சட்டப் பேரவைத் தலைவர் (முதல்வர்) புதன்கிழமை ஒருமனதாகத் தேர்ந்து எடுக்கப்படுவார் என்று மேலிடப் பார்வையாளர்களில் ஒருவரான விஜய் ரூபானி தெரிவித்து உள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று மாலை (செவ்வாய்க்கிழமை) மும்பை செல்கிறேன். நிர்மலா சீதாராமனும் அங்கு வருவார்.
தொடர்புடைய செய்திகள்
“மகராஷ்டிர பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் நடைபெறும். அனைவரும் ஒன்றுகூடி விவாதிப்போம்.
“அதன் பிறகு, ஆளும் கூட்டணியின் சட்டப் பேரவைத் தலைவரை ஒருமனதாகத் தேர்ந்து எடுப்போம். அது பற்றி மேலிடத்திற்குத் தெரிவித்த பின்னர், முதல்வரின் பெயர் அறிவிக்கப்படும்,” என்றார்.
நவம்பர் மாதம் நடந்து முடிந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவு நவம்பர் 23ஆம் தேதி வெளியானது.
பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணி, மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230ல் வெற்றி பெற்றது.
பாஜக 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா (ஷிண்டே) 57, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) 41 இடங்களில் வெற்றி பெற்றன.
தேர்தலில் வென்றபோதிலும், அரசு அமைப்பதில் 10 நாள்களுக்கு மேல் தாமதமாகி வருகிறது.
முதல்வர் பதவியை மீண்டும் ஏக்நாத் ஷிண்டேவுக்கே வழங்க வேண்டும் என அவரது கட்சியினர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், தனிப்பெரும் கட்சியாக பாஜக விளங்குவதால் அக்கட்சியின் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.