எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து

படம்: தினமணி

17 Mar 2026 - 7:44 pm

1 mins read

புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எட்டுப் பேர் இடைநீக்கம் செய்யப்பட்டது ரத்தானது. இதற்கான தீர்மானம் மக்களவையில் கொண்டுவரப்பட்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன் உள்ளிட்ட எட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடந்த கூட்டத்தொடரின்போது இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர் சிலர் பிரதமர் மோடியை அவமரியாதை செய்யத் திட்டமிட்டிருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக தமக்கு நம்பத்தகுந்த உளவுத்தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், பெண் எம்.பி.க்கள் இதற்காகத் திட்டமிட்டுள்ளதாகவும் மக்களவையில் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, அமளி மேலும் அதிகரித்த நிலையில், எட்டு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அந்த நடவடிக்கை தற்போது கைவிடப்பட்டுள்ளது. மக்களவையின் கண்ணியம் பேணப்பட வேண்டும் என்று பாஜக எம்.பி. அருண் கோவில் தெரிவித்துள்ளார்.

இடைநீக்க நடவடிக்கையை ரத்து செய்ததற்காக காங்கிரஸ் எம்.பி. குர்ஜித் சிங் அவ்லா நன்றி தெரிவித்தார்.

எனினும், எம்.பி.க்கள் அனைவருக்கும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
நாடாளுமன்றம்நாடாளுமன்ற உறுப்பினர்எம்.பி.ராகுல் காந்திஇடைநீக்கம்ரத்து