கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 207 தொகுதிகளில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆட்சியைப் பிடித்துள்ளது. ஆனால், இந்தியத் தேர்தல் ஆணையமும் பாஜகவும் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி கூறிவந்தார்.
முதல்வர் பதவியிலிருந்து விலகவும் அவர் மறுத்தார்.
இதையடுத்து, மேற்குவங்க ஆளுநர் ஆர்.என். ரவி அம்மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார். கோல்கத்தாவில், மே 8ஆம் தேதி நடந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் புதிய சட்டமன்றத் தலைவராக சுவேந்து அதிகாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய தலைவர் பதவிக்கு எட்டுப் பரிந்துரைகள் வந்திருந்ததாகவும் எட்டுமே சுவேந்து அதிகாரியைத்தான் பரிந்துரைத்ததாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
சுவேந்து அதிகாரி ஆளுநரைச் சந்தித்து தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து, பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்தன.
கோல்கத்தாவின் மத்தியப் பகுதியில் உள்ள பிரிகேட் விளையாட்டரங்கில் பதவியேற்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவ்விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் ஆகியோர் மேற்கு வங்கத்திற்கு விரைந்தனர்.
சனிக்கிழமை (மே 9) நடந்த விழாவில் சுவேந்து அதிகாரிக்குப் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் ஆளுநர் ரவி செய்துவைத்தார். சுவேந்து அதிகாரியுடன் திலீப் கோஷ், அக்னிமித்ர பால், நிசித் பிரமானிக், க்ஷுத்திரம் துடு, அசோக் கீர்தானியா ஆகியோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
மேற்கு வங்கத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, பதினைந்து ஆண்டுகால திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. சுவேந்து அதிகாரி நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பவானிபூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியை 15,115 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

