அமெரிக்காவில் முதல்முறையாகச் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு

அமெரிக்காவில் முதல்முறையாகச் சுவாமி விவேகானந்தரின் சிலை திறப்பு

1 mins read
eeacef83-87b6-4398-87f9-865b4295258d
சியாட்டில் நகரத்தில் திறக்கப்பட்ட விவேகானந்தர் சிலை. - படம்: தினமணி

அமெரிக்காவில் முதல்முறையாகச் சுவாமி விவேகானந்தரின் முழு உருவ வெண்கலச் சிலை சியாட்டில் நகரில் திறக்கப்பட்டுள்ளது.

அந்நகர மேயர் கேட்டி வில்சனும் சியாட்டிலில் உள்ள இந்தியத் துணைத் தூதர் பிரகாஷ் குப்தாவும் இணைந்து ஏப்ரல் 11ஆம் தேதி அச்சிலையைத் திறந்து வைத்தனர்.

இந்திய வம்சாவளியினர், உள்ளூர் தலைவர்கள் பலர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விவேகானந்தரின் சிலை, சியாட்டில் நகரின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதுடன் இந்தியா - அமெரிக்கா இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும் எனத் திரு கேட்டி வில்சன் தெரிவித்தார்.

சியாட்டில் நகர மையத்தின் பரபரப்பான வெஸ்ட்லேக் சதுக்கத்தில் அமைந்துள்ள அந்த வெண்கலச் சிலை, இந்திய சிற்பி நரேஷ் குமார் குமாவத்தால் வடிவமைக்கப்பட்டது.

அந்நகரின் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் விதமாக இந்தியக் கலாசார உறவுகளுக்கான மன்றம் சார்பில் பரிசாக வழங்கப்பட்டது.

அமேசான் தலைமையகமான ‘ஸ்பியர்ஸ்’, சியாட்டில் மாநாட்டு மையம் உள்ளிட்ட முக்கிய அடையாளச் சின்னங்களுக்கு அருகில் அச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இடத்துக்குத் தினமும் கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வருகை தருகின்றனர்.

முன்னதாக, சுவாமி விவேகானந்தர் 1893ஆம் ஆண்டு சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்கள் குறித்த மாநாட்டில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவு உலகளாவிய கவனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதை மேற்கோள்காட்டி இந்தியத் தூதரகம் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘1893 சிகாகோவிலிருந்து 2026 சியாட்டில் வரை! நகர அடையாளத்தில் இந்தியாவின் புதிய நினைவுச் சின்னம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்