புதுடெல்லி: இந்தியா-ஐரோப்பியத் தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு இடையிலான மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் நடைமுறைகளைச் சுவிட்சர்லாந்து இறுதியாக நிறைவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இத்தகவலை இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதர் மாயா டிஸ்ஸாஃபி புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) தெரிவித்தார்.
இந்தியா பல்வேறு நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை மேற்கொண்டு வருகிறது.
மேலும், ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நார்வே, சுவிட்சர்லாந்து ஆகிய நான்கு நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பியத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தக் கூட்டமைப்புடனும் இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொண்டது.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக மேற்கொண்ட தொடர் பேச்சுவார்த்தைகளின் முடிவில், கடந்த மார்ச் மாதம் இந்தியா- ஐரோப்பியத் தடையற்ற வர்த்தகக் கூட்டமைப்பு இடையே வர்த்தகம் மற்றும் பொருளியல் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தத்தை, கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள ஐஸ்லாந்து, லிக்டென்ஸ்டைன், நார்வே ஆகிய 3 நாடுகளும் ஏற்கெனவே உறுதி செய்தன.
ஆனால், இந்த ஒப்பந்தத்துக்குச் சுவிட்சர்லாந்தின் தேசிய மன்றம் ஒப்புதல் அளித்து ஏழு மாதங்களுக்கு மேலாகியும், சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒப்பந்தத்தை உறுதி செய்யாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தும் தற்போது ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
“வர்த்தக ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்புக்கான காலக்கெடு சுவிட்சர்லாந்து நேரப்படி வியாழக்கிழமை (ஜூலை 10) நள்ளிரவில் நிறைவடைந்தது. காலக்கெடு நிறைவடையும் வரை வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராக யாரும் வாக்களிக்கவில்லை. இதன் மூலம், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்துக்குச் சுவிட்சர்லாந்து அனுமதி வழங்குவது உறுதியானது,” என்று தூதர் மாயா டிஸ்ஸாஃபி கூறினார்.
இந்த ஒப்பந்தம் இந்தியா - சுவிட்சர்லாந்து இடையேயான இருதரப்பு உறவில் குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஒப்பந்தம் வரும் அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியா மற்றும் கூட்டமைப்பின் நாடுகளிடையே நீண்ட கால ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், ஒப்பந்தத்தில் உள்ள நான்கு நாடுகளும் இந்தியாவில் அடுத்த 15 ஆண்டுகளில் சுமாா் 100 பில்லியன் அமெரிக்க டாலா் முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் இந்தியாவில் 1 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறப்படுகிறது.