போபால்: ஐஸ்லாந்து, நார்வே உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளன.
சுவிட்சர்லாந்து, அதன் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் (EFTA) நட்பு நாடுகளான இவை, அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்துள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகரான போபாலில் அனைத்துலக முதலீட்டாளர்கள் உச்ச நிலை மாநாடு நடைபெறுகிறது.
இம்மாநாட்டைப் பிரதமர் மோடி பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி வைத்தார். அம்மாநிலத்துக்கான முதலீடுகளைப் பெறும் நோக்கத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது.
அப்போது, வரும் ஆண்டுகளில் உலகில் பொருளியல் வேகமாக வளரும் நாடாக இந்தியா நீடிக்கும் என உலக வங்கி நம்பிக்கை தெரிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
இம்மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய, சுவிட்சர்லாந்து தூதர் ஜெனரல் மார்ட்டின் யு மேயர், இந்தியாவிற்கும் ‘ஈஎஃப்டிஏ’ (EFTA) நாடுகளுக்கும் இடையே அண்மையில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக மற்றும் பொருளியல் பங்காளித்துவ ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக முதலீட்டு உறுதிமொழி அமைகிறது என்றார்.
இருதரப்பு பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்த முதலீட்டு ஒப்பந்தம் முக்கியமான ஓர் அத்தியாயமாகப் பார்க்கப்படுகிறது என்றும் இந்தியாவில் தங்கள் தடத்தை விரிவுபடுத்த சுவிஸ் வணிகங்களை இந்தியா ஈர்ப்பதாகவும் மார்ட்டின் யு மேயர் குறிப்பிட்டார்.
“இந்தியாவுடன் சேர்ந்து, சுவிஸ் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வந்து இங்கு முதலீடு செய்வதை நாம் இப்போது உறுதி செய்ய வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
பல நிறுவனங்கள் முதலீட்டு வாய்ப்புகளைப் பெறுவதில் ஆர்வமாக உள்ளன. எனினும், முதலீடுகளைத் தேடும் பிற ஆசிய நாடுகளிடமிருந்தும் கடுமையான போட்டி ஏற்படும்,” என்றார் மார்ட்டின் மேயர்.
பல சுவிஸ் நிறுவனங்கள் தங்கள் இந்திய செயல்பாடுகளை உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இணைத்து, இந்தியாவை உற்பத்தி மற்றும் வணிகத்திற்கான முக்கிய மையமாக மாற்றுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
தொடக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தியப் பொருளியல் உலக அளவில் மிகப்பெரிய வளர்ச்சி காணும் என்றார்.
“உலகளாவிய விண்வெளி நிறுவனங்களுக்கான சிறந்த விநியோகச் சங்கிலியாக இந்தியா வளர்ந்து வருகிறது. ஜவுளி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறைகள் வரும் ஆண்டுகளில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
“சுகாதாரம், மக்கள் நல்வாழ்வுத்துறைகளில் பல வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் குணமடைதல் என்ற மந்திரத்தை உலகம் விரும்புகிறது,” என்றார் பிரதமர் மோடி.