புதுடெல்லி: இந்தியாவில் தொழில் செய்வதை மேலும் எளிதாக்கும் வகையில், பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) நிர்வாக முறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதுடெல்லியில் வியாழக்கிழமை (அக்டோபர் 8) நடைபெற்ற 57வது ஜிஎஸ்டி மன்றக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளின்படி, ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த வணிகர்களைக் கைது செய்யும் அதிகாரம் முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தவறுகளுக்கு விதிக்கப்படும் பொதுவான அதிகபட்ச அபராதத் தொகை ரூ.25,000லிருந்து ரூ.10,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. சட்டபூர்வமான குறைந்தபட்சத் தண்டனை நீக்கப்பட்டு, அபராதம் அல்லது சிறைத்தண்டனை குறித்து முடிவெடுக்கும் உரிமை நீதிமன்றங்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான குறைந்தபட்ச வரிஏய்ப்பு வரம்பு ரூ.1 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ. 10,000க்கும் குறைவான தொகை தொடர்பான விவகாரங்களுக்கு அழைப்பாணை அனுப்பப்படாது. இது சிறிய வரிச் சிக்கல்களில் ஈடுபட்டுள்ள வணிகங்கள், வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும்.
பெரும்பாலான வரி திரும்பப்பெறல் (Refund) கோரிக்கைகளுக்கு மூன்று நாள்களுக்குள் விரைந்து தீர்வு காணவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மின்வணிகத் தளங்களில் சிறு விற்பனையாளர்கள் சுலபமாகப் பதிவெடுக்கவும், ஜிஎஸ்டி பதிவு விவரங்களில் மாற்றங்களைச் செய்யவும் எளிமையான நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நேர்மையான முறையில் வரி செலுத்திப் பொருள்களை வாங்குவோரைப் பாதுகாப்பது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகள் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
வரி விகிதங்களை மாற்றுவதைவிட, வணிகச் சுமைகளைக் குறைத்துத் தொழில் செய்வதை எளிதாக்குவதே இச்சீர்திருத்தங்களின் முதன்மை நோக்கம் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி அதிகாரிகளுடனான தேவையற்ற தொடர்புகளைக் குறைத்து, வெளிப்படைத்தன்மையையும் கணிப்புத் திறனையும் அதிகரிக்க இந்நடவடிக்கைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
