தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிகமானோர் சென்று பார்த்த சுற்றுலாத் தலம் தாஜ்மகால்

2 mins read
b4bcd826-384c-4ba0-9001-f07efba5bba9
தாஜ்மகாலை 62.6 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் 6.4 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் பார்வையிட்டுள்ளனர்.  - கோப்புப் படம்: ஊடகம்

புதுடெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், 2024/25ல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளால் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலமாக விளங்குகிறது என்று இந்திய அரசு சனிக்கிழமை (செப்டம்பர் 27) தெரிவித்தது.

உலக சுற்றுலா தினத்தையொட்டி, நாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த அறிக்கையை இந்திய சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்டது.

அதில், 2024ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 99.5 லட்சமாகும். இது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.52 விழுக்காடு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

அது மட்டுமல்லாமல், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் சுற்றுலாத் தலங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளால் அதிகம் பாா்வையிடப்பட்ட இடமாக தாஜ்மகால் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தாஜ்மகாலை 62.6 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் 6.4 லட்சம் வெளிநாட்டுப் பயணிகளும் பார்வையிட்டுள்ளனர். தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக, ஒடிசாவில் உள்ள கோனார்க் சூரிய கோயிலை 35.7 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் குதுப் மினாரை 32 லட்சம் உள்நாட்டுப் பயணிகளும் பார்வையிட்டுள்ளனர்.

அதேபோல், ஆக்ரா மற்றும் குதுப் மினாரை தலா 2.2 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பார்த்துள்ளனர்.

இந்தியத் தொல்லியல் துறையின்கீழ் உள்ள 3,697 தொன்மையான நினைவுச்சின்னங்களும் தொல்பொருள் தலங்களும், பல மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் அமைந்துள்ளன.

இதற்கிடையே, 2024ல் இந்தியாவுக்குச் சென்ற வெளிநாடுவாழ் இந்தியர்களின் எண்ணிக்கை 1.62 கோடியாக உள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது, 13.22 விழுக்காடு அதிகமாகும்.

இது, கொவிட்-19 பெருந்தொற்றுக்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 52.19 விழுக்காடு அதிகமாகும்.

2024ல் இந்தியா சென்ற வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை 2.57 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 8.89 விழுக்காடு அதிகமாகும். இதில் 35-44 வயதுப் பிரிவினர் 20.67 விழுக்காடாகவும் 45-54 வயதுப் பிரிவினர் 20.24 விழுக்காடாகவும் உள்ளனர். பாலினத்தின் அடிப்படையில், ஆண்கள் 57.7 விழுக்காடாகவும் பெண்கள் 42.3 விழுக்காடாகவும் உள்ளனர்.

2024ல் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்கு அதிக இந்தியர்கள் பயணம் செய்தனர். அதற்கு அடுத்தபடியாக சவூதி அரேபியா, அமெரிக்கா, தாய்லாந்து, சிங்கப்பூர், பிரிட்டன், கத்தார், கனடா, குவைத், ஓமான் ஆகிய நாடுகளுக்கு அதிக இந்தியா்கள் பயணம் செய்தனர்.

வெளிநாடுகளுக்கு 98.4 விழுக்காடு இந்தியர்கள் விமானப் பயணம் மூலமாகவே சென்றுள்ளனர். 1.54 விழுக்காட்டினர் சாலை வழியாகவும் 0.54 பேர் கடல்வழியாகவும் பயணித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்