புதுடெல்லி: மத்திய கிழக்கு வட்டாரத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு இடையே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையிலான முக்கியப் பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) நடைபெற்றது.
புதுடெல்லியில் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டிற்கு முன்பாக நடைபெற்ற இச்சந்திப்பில், கடல்சார் வணிகப் பாதுகாப்பு, கடலோடிகளின் நலன் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக விவாதித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
கடந்த நான்கு வாரங்களுக்குள் இவ்விரு தலைவர்களும் இரண்டாவது முறையாகச் சந்தித்துள்ளனர்.
அண்மைக் காலமாக செங்கடல், வளைகுடாப் பகுதிகளில் வர்த்தகக் கப்பல்கள்மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, இப்பாதைகளில் பயணம் செய்யும் இந்தியக் கடலோடிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இச்சூழலில், “அனைத்துலகக் கடல்சார் வணிகப் பாதைகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும். எவ்விதத் தடையுமின்றி வர்த்தகக் கப்பல்கள் சுதந்திரமாக இயங்கும் கடலோடிகளின் உயிரைப் பாதுகாப்பதும் தற்போதைய அவசரத் தேவை,” என்று இந்தியப் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான், அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தியா மிகவும் எச்சரிக்கையான, சமநிலையான வெளியுறவுக் கொள்கையைக் கையாண்டு வருகிறது. வரலாற்று ரீதியாக ஈரானுடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ள அதேவேளையில், வட்டார அமைதியையும் வலியுறுத்தி வருகிறது.
தூதரகப் பேச்சுவார்த்தைகள், அமைதியான வழிகள் மூலமாக மட்டுமே சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
பிரிக்ஸ் வர்த்தக மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சுதந்திரமான கடல்சார் வணிகமும் தடையற்ற விநியோகச் சங்கிலியும் உலகப் பொருளியலின் தடையற்ற வளர்ச்சிக்கு மிக அத்தியாவசியமானவை,” எனக் குறிப்பிட்டார்.
அதேவேளையில், ஈரானிய அதிபர் பெசெஷ்கியான் பேசும்போது, பொருளியல் தடைகள், அழுத்தங்கள் மூலமாகப் பிற நாடுகளின் சட்டபூர்வ வர்த்தகத்தைத் தடுக்கும் போக்கைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
வட்டார அளவில் நிலவும் போர் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவுடன் இச்சந்திப்பு நிறைவடைந்தது.

