புதுடெல்லி: அமெரிக்காவின் பிரபல கல்வி நிலையமான ஜான் ஹாப்கின்ஸ் (John Hopkins) பல்கலைக்கழகத்தின் கிளையை இந்தியாவில் அமைக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா (Times of India) போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இந்தியாவின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அமெரிக்காவின் மேரிலண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராளர்களுடன் ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 17) பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்தார். கல்வியாளர் மற்றும் ஆய்வு தொடர்பில் ஒத்துழைப்பது குறித்தும் அந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
“சந்திப்பில் கலந்துகொண்ட உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் காட்டும் ஆர்வத்தைப் பார்க்கும்போது நல்லதொரு முடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு உள்ளது,” என்று இந்திய கல்வி அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். ஒரே நேரத்தில் இரு பட்டங்களைப் பெற வகைசெய்யும் பாடத் திட்டங்கள், கூட்டு பட்டக் கல்விப் பாடத் திட்டங்கள் (dual and joint degree programmes), செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் துறைகளில் ஆய்வு சார்ந்த பங்காளித்துவத்தை உருவாக்குவது உள்ளிட்டவை பற்றியும் பேசப்பட்டதாக அந்த அதிகாரி சொன்னார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 (National Education Policy 2020) திட்டத்தினால் தலைதூக்கக்கூடிய உருமாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய வாய்ப்புகளையும் திரு பிரதான் சுட்டினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 பேராளர்களைக் கொண்ட பேராளர்க் குழு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா சென்றது. உலகளவில் பிரபலமான அமெரிக்காவின் முன்னணி கல்விக் கழகம் ஒன்றிலிருந்து இத்தனை பேராளர்களைக் கொண்ட குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டது இதுவே முதல்முறையாகும்.