பெங்களூரு பல்கலையில் தமிழ் இருக்கை

பெங்களூரு பல்கலையில் தமிழ் இருக்கை

1 mins read
d76fdde7-a43b-43c9-ac05-8c80d9083921
செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகம். - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள செயின்ட் ஜோசஃப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்பட உள்ளது.

இதற்கு அப்பல்கலையின் துணை வேந்தர் விக்டர் லோபோ ஒப்புதல் அளித்துள்ளதாக திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்டி குமார் தெரிவித்தார்.

மேலும், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கக் கோரி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்போவதாக பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவர் சங்கம் சார்பாக செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தில் ஏழாவது உலகத் திருக்குறள் மாநாடு ஜூலை 5ஆம் தேதி நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அப்போது திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் செயின்ட் ஜோசப் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக நினைவூட்டினார்.

தமிழ் இருக்கை அமைப்பது தொடர்பான முடிவைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழுவின் முன்வைத்து, அவர்களின் ஒப்புதலைப் பெற்று, முறைப்படி தமிழ் இருக்கை அமைக்க வழிவகை செய்யப்படும் எனத் துணை வேந்தர் லோபோ தம்மிடம் தெரிவித்ததாகவும் இதன்மூலம் கர்நாடகாவில் முதல்முறையாக பல்கலைக்கழகம் ஒன்றில் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகி உள்ளதாகவும் எஸ்டி குமார் தெரிவித்தார்.

தமிழ் இருக்கை அமைக்கும் பணிக்காகத் தாம் ரூ.10 லட்சம் அளிக்க உள்ளேன் என்றும் அவ்வாறு இருக்கை அமைக்கப்பட்டால் கர்நாடகாவைச் சேர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயனடைவர் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பெங்களூருபல்கலைக்கழகம்தமிழ்திருவள்ளுவர்சங்கம்