உதகமண்டலம்: ஆஸ்கார் விருது வென்ற 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணக் குறும்படத்தில் நடித்த பொம்மன் - பெள்ளி தம்பதியின் புகழ் விண்ணைத் தொட்டது.
'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினரைச் சந்திக்கவும் பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காகவும் இருவரும் மும்பை சென்றிருந்தனர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து இண்டிகோ விமானம் மூலமாக நேற்று வெள்ளிக்கிழமை கோயம்புத்தூர் திரும்பினர்.
அப்போது அவ்விமானத்தின் விமானி, "தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் புகழ் நட்சத்திரங்கள் நம்முடன் பயணம் செய்கின்றனர். அவர்களுடன் பயணம் செய்வது நாம் செய்த அதிர்ஷ்டம்," என்று அறிவித்தார்.
பயணிகள் அனைவரும் கைத்தட்டி அவர்களைப் பாராட்டும்படியும் அவ்விமானி கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, திரு பொம்மனும் திருவாட்டி பெள்ளியும் எழுந்து நின்று கைகூப்பி தங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
"அவர்கள் நடிகர்கள் அல்லர், உண்மையான மக்கள்," என்றும் விமானி குறிப்பிட்டார்.

