புதுடெல்லி: நூறு நாள் வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் காந்தியின் பெயரை நீக்கிய பாஜக அரசாங்கத்தைக் கண்டித்து போராட்டங்களைத் தீவிரப்படுத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதனால் திங்கட்கிழமை (ஜனவரி 19) சென்னையில் நடைபெறவிருந்த தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ளது.
செயற்குழுக் கூட்டத்தில் தேர்தல் ஆயத்தப் பணிகள் மற்றும் கட்சி மேலிடம் வழங்கிய அறிவுறுத்தல்கள் பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அனைத்து இந்திய காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவும் முதல்வர் ஸ்டாலினுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது.
இதனிடையே காங்கிரஸ் நிர்வாகியும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்துவிட்டு வந்தார்.
அதன்பிறகு ‘ஜனநாயகன்’ படம் தொடர்பாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ராகுல் காந்தி உள்ளிட்டோர் ஆதரவுக் குரல் கொடுத்தனர்.
தொடர்புடைய செய்திகள்
தொகுதி எண்ணிக்கையைத் தொடர்ந்து குறைத்து வரும் திமுக கூட்டணியிலிருந்து விலகி, தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு காங்கிரசில் ஒரு பிரிவினர் வலியுறுத்தி வந்தனர்.
இது திமுக தலைமைக்குக் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்றக் காங்கிரஸ் தலைவர் செ.ராஜேஷ்குமார் உள்ளிட்ட 41 தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அனைத்து இந்தியக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சனிக்கிழமை (ஜனவரி 17) டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.
தமிழகக் காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி தொடர்பாகப் பொதுவெளியில் பேசவும் சமூக ஊடகங்களில் பதிவிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

