சென்னை: டித்வா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கைக்குத் தமிழகம் உதவிக்கரம் நீட்டுகிறது. வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை அந்நாட்டின் பல பகுதிகளைப் புரட்டிப்போட்டது. வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டன.
டித்வா புயலின் சீற்றத்தால் இலங்கையில் ஏறக்குறைய 500 பேர் மாண்டனர். மேலும் 700க்கும் மேற்பட்டோரை இன்னும் காணவில்லை.
இலங்கையின் மக்கள்தொகை 22 மில்லியன். அதில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் வெள்ளத்தாலும் நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே இலங்கையில் சிக்கியிருந்த 300க்கும் மேற்பட்ட இந்தியர்களை இந்திய விமானப் படை பத்திரமாக மீட்டுத் தாயகத்திற்கு அழைத்துவந்தது.
டித்வா புயலின் கோரத்தாண்டவத்தால் இலங்கை மக்கள் கடும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
புயலில் மாண்டோரின் குடும்பத்தாருக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டுள்ளார். இக்கட்டான இந்த நேரத்தில், தமிழக அரசு இலங்கை மக்களுக்குத் துணை நிற்கும் என்று அவர் கூறினார். அவர்களுக்கு உதவும் வகையில் மொத்தம் 950 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் திரு ஸ்டாலின் தெரிவித்தார். அவற்றின் மதிப்பு கிட்டத்தட்ட 1.20 கோடி ரூபாய். சென்னையில் நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்டிருந்த கப்பலை முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை (டிசம்பர் 6) கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
தூத்துக்குடித் துறைமுகத்திலிருந்தும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டன. 10 ஆயிரம் போர்வை, 10 ஆயிரம் துண்டு, 5 ஆயிரம் வேட்டி, 5 ஆயிரம் சேலை முதலியவற்றுடன் பருப்பு, சர்க்கரை, பால் மாவு போன்றவையும் அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கையின் ஊவா மாகாணத்தின் முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டைமான் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார். சரியான நேரத்தில் உதவி கிடைத்திருப்பதாக அவர் சொன்னார். உடைமைகளை இழந்து தவிக்கும் இலங்கை மக்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

