புதுடெல்லி: புதுடெல்லியில் துணை அதிபர் ஜகதீப் தன்கரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருந்த நிலையில், அதுதொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது.
அது மட்டுமல்லாமல் உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தது.
மசோதாவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்று.
அது மட்டுமல்லாமல், மாநில ஆளுநா்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களுக்குள் அதிபர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசிப்பதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களை ஆளுநர் ரவி சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே ஆளுநர் ஆர்.என். ரவி சனிக்கிழமை அன்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
ஆளுநர் ரவி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மத்திய சட்டத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

