புதுடெல்லி: தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பத்து மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த மசோதாக்களை அதிபரின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.
இதையடுத்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து, ஒரு மாதத்துக்கு முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கில்தான் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில், அரசியலமைப்புச் சட்டம் 200இன்படி, ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருப்பது சட்டப்படி தவறானது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
“சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீதான ஆளுநர் செயல் ஏற்புடையது அல்ல. அவற்றை அதிபருக்கு ஆளுநர் அனுப்பியதும் தவறு.
“தான் நிறுத்தி வைத்திருக்கும் மசோதா செல்லாது எனக் கூற, ஆளுநருக்கு உரிமை இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது.
தொடர்புடைய செய்திகள்
“பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருக்க வேண்டும்,” என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, ஆளுநரின் முடிவை ரத்து செய்த நீதிபதிகள், தமிழக அரசின் 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்படும் எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் பெற்றுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பேரவையில் பேசிய அவர், ஆளுநர் மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“இந்தத் தீர்ப்பு தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி.
“திமுகவின் உயிர்க்கொள்கையான மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவத்தை நிலைநாட்ட தமிழகம் போராடியது. தமிழகம் போராடும், தமிழகம் வெல்லும்,” என்ற முதல்வர் ஸ்டாலின் மேலும் குறிப்பிட்டார்.