சென்னை: வடமாநில வாக்காளர்களுக்குத் தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிப்பது அரசியல் கட்டமைப்பில் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
தமிழக வாக்காளர் பட்டியலில் வடமாநில மற்றும் இதர மாநில வாக்காளர்களின் பெயர்கள் பரவலாக இடம் பெற்றுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாயின.
பீகாரிலும் இதே விவகாரம் எதிரொலித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசினார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன்.
வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாகச் சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிவிடும் என்று சொன்னார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரான திருமாவளவன்.
மேலும், வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்ற உறுதியான நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருமா.
முன்னதாக, இவ்விவகாரம் தொடர்பில் தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதுகுறித்து பேசிய அவர், ‘‘வடமாநில இந்தியர்களுக்குத் தமிழகத்தில் வாக்குரிமை அளிக்கக் கூடாது.
தொடர்புடைய செய்திகள்
‘‘தேர்தல் நேரத்தில் அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிட வேண்டும். இல்லையெனில், அது அரசியல் நிலவரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்,’’ என்றார்.
இதற்கு வலுவான எதிர்ப்பைத் தொடர்ந்து பதிவு செய்துவரும் தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், ‘‘இந்த விவகாரத்தைத் தமிழகத்தில் மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும். வெளிமாநிலத்தவர்க்கு தமிழ் நாட்டில் வாக்குரிமை கொடுத்து, அதன் மூலம் தமிழ் நாட்டிற்கு பாதிப்பு ஏற்பட்டால் சீறும் சிங்கங்களாக மாறுவோம்‘ என்று எச்சரித்தார்.
இதற்கிடையே, வாக்காளர் மற்றும் வாக்குரிமை விவகாரத்தில் பாஜக முறைகேடு செய்கிறது என்று எழுந்துள்ள புகார்குறித்து விளக்கமளித்தார் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
‘‘வாக்காளர்களை மாநிலம், மொழி என்ற அடிப்படையில் வேற்றுமைபடுத்திப் பிரித்துப் பார்க்கக் கூடாது,’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சில கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மக்களைத் திசைதிருப்ப பிரிவினைவாதத்தைத் தூண்டுகின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
இதற்கிடையே, பீகாரைத் தொடர்ந்து தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளைத் தொடங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பீகாரிலிருந்து வெளியேறிய ஏறத்தாழ ஆறரை லட்சம் வாக்காளர்களில் கணிசமானோர் தமிழகத்தில் இருப்பது தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.