கோவை: கோவையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பலைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இணையம் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அந்தத் தகவலைத் தொடர்ந்து காவல்துறை தனிப்படை அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தியது. அப்போது அந்த வீட்டில் ஏழு பேர் கொண்ட கும்பல் இருந்தது.
அதிகாரிகள் விசாரித்தபோது, அவர்கள் ஏழு பேரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி, இணையம் வாயிலாகச் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் அனைவரும் கைதுசெய்யப்பட்டனர்
அந்தக் கும்பலிடமிருந்து ரூ.1.09 கோடி பணம், 2 கார்கள், 2 இருசக்கர வாகனங்கள், 12 கைப்பேசிகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
வாட்ஸ்அப் ஊடகத்தில் அறிமுகமாவோரை உறுப்பினராகச் சேர்ந்து கிரிக்கெட் சூதாட்டம் நடத்தப்பட்டு உள்ளது.
தங்களுக்குப் பிடித்த அணியைத் தேர்வு செய்த பின்னர் பூவா தலையா காசு போடுவது முதல் பவுண்டரி அடிப்பது, விக்கெட் எடுப்பது, ஓட்டங்கள் எடுப்பது வரை அத்தனையிலும் பந்தயம் நடந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதில் வெற்றி பெறுவர்களுக்கு அவர்களுக்குச் சேரவேண்டிய தொகையைச் சூதாட்டக் கும்பல் கொடுத்துவிடும்.
கடந்த சில மாதங்களாக இதுபோன்ற மோசடியில் அந்தக் கும்பல் ஈடுபட்டு வந்தது தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது.