சென்னை: கடந்த 2024-25 நிதியாண்டில், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியைப் பொறுத்தமட்டில் 11.19 விழுக்காட்டு வளர்ச்சியை எட்டி தமிழ்நாடு சாதித்துள்ளது.
இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்த ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் இது தெரியவந்துள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு 9.69 விழுக்காடு வளர்ச்சியை எட்டியிருக்கும் என்று அமைச்சு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட முதற்கட்ட மதிப்பீட்டு அறிக்கையில் கணித்திருந்தது. இந்நிலையில், மாநிலத்தின் உண்மையான வளர்ச்சி அக்கணிப்பை விஞ்சியுள்ளது.
கடந்த 2010-11ஆம் ஆண்டிலும் 13.12 விழுக்காடு எனத் தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவுசெய்திருந்தது. அப்போதும் திமுகவே ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.17.2 லட்சம் கோடி என்ற நிலையை எட்டியுள்ளது.
மாநிலத்தின் தலைவிகித வருமானம் (per capita income) ரூ.1.97 லட்சமாகப் பதிவாகியிருக்கிறது. கர்நாடக மாநிலத்தின் தலைவிகித வருமானம் ரூ.2.04 லட்சம்.
வரும் 2030ஆம் ஆண்டிற்கும் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளியலைக் கொண்ட மாநிலமாக உருவெடுக்க வேண்டும் எனத் தமிழக அரசு இலக்கு கொண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அது கைகூட வேண்டுமெனில், தமிழகப் பொருளியல் வளர்ச்சியானது ஆண்டிற்கு 12 விழுக்காடு எனும் விகிதத்தில் இருக்க வேண்டும் என இவ்வாண்டு முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழகப் பொருளியல் ஆய்வு தெரிவித்திருந்தது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா 7.27 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
இந்நிலையில், “இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திமுக அரசு. இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69 விழுக்காட்டுப் பொருளியல் வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம். இப்போது அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19 விழுக்காடு என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது.
“2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளியல் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும் என்றார்கள். இதே வேகத்தில் சென்றால் எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது,” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

