புதுடெல்லி: கூரை சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் திட்டத்தின்கீழ் பயனடையும் மாநிலங்களில், தமிழகத்துக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது.
இந்தத் திட்டத்தில் குஜராத், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் ஆகிய வடமாநிலங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மத்திய அரசின் கூரை சூரிய சக்தி உற்பத்தித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகம் படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில், இந்திய அளவில் தமிழகம் ஒன்பதாகவது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார இணை அமைச்சர் ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் எழுத்துபூர்வமாகப் பதிலளித்துள்ளார்.
அதில், கடந்த ஜனவரி மாதம்வரை கூரை சூரிய சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 67,833 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் இதுவரை 53,834 சூரிய சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் 63,079 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
கடந்த 2024ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது முதல் இன்றுவரை 58.25 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாவும் இதுவரை 22.48 லட்சம் சூரிய சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளதாகவும் திரு ஸ்ரீபாத் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இதன்மூலம் 28 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், குஜராத்தில் மட்டும் ஏறக்குறைய 7.78 லட்சம் வீடுகள் பயனடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 6.8 லட்சம் வீடுகளும் உத்தரப் பிரதேசத்தில் 3.58 லட்சம் வீடுகளும் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளன என்று அவர் கூறினார்.
தென் மாநிலங்களில் கேரளா சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. அங்கு 1.92 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தைச் செயல்படுத்தி பலன் கண்டுள்ளன.
ஆந்திராவில் 96,196 குடும்பங்கள் பலனடைந்துள்ள நிலையில், புதிதாக 12.51 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இது நாட்டிலேயே ஆக அதிக எண்ணிக்கையாகும்.
தென் மாநிலங்களில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அதிகபட்சமாக, இதுவரை கோவையில் 10,738 வீடுகளிலும் சென்னையில் 7,964 வீடுகளிலும் செங்கல்பட்டில் 6,233 கூரைகளில் சூரிய சக்தி அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
திருப்பூர், சேலம், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில், தலா 2,500 குடும்பங்கள் இத்திட்டத்தால் பலனடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வீடுகளின் கூரைகளில் சூரிய ஒளிமின் தகடுகளைப் பொருத்தி, சூரிய ஒளியை நேரடியாக மின்சாரமாக மாற்றும் இந்த கூரை சூரிய சக்தி, மின்சார நுகர்வைக் குறைத்து, மின் கட்டணத்தைச் சேமிக்க உதவுகிறது.

