மோடியின் செங்கோல் நாடகம் முடிந்துவிட்டது: காங்கிரஸ்

1 mins read
16bae0e7-db1e-4db8-844e-69db48b26775
புதிய நாடாளுமன்றத்தின் அவை நடுவே கடந்த ஆண்டு செங்கோலை நிறுவிய பிரதமர் மோடி. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மதிப்பிற்குரிய செங்கோலை ஏந்தி மோடி செய்த பாசாங்குகளை தமிழர்கள் நிராகரித்து உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

அந்தப் பதிவில் அவர் குறிப்பிடுகையில், “மே 28, 2023 நினைவிருக்கிறதா? செங்கோலுடன் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நுழைந்த நாள். மோடி ஒரு பேரரசர் என்று நியாயப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், தமிழ் வாக்காளர்களை ஈர்க்கவும் 15 ஆகஸ்ட் 1947ஆம் ஆண்டு வரலாறு திரிக்கப்பட்டது.

“அந்த நாடகத்தின் முடிவு இப்போது எல்லோருக்கும் தெரியும். செங்கோல் என்பது தமிழர் வரலாற்றின் மதிப்பிற்குரிய அடையாளமாக உள்ளது. ஆனால் தமிழ் வாக்காளர்களும் உண்மையில் இந்தியாவின் வாக்காளர்களும் மோடியின் பாசாங்குகளை நிராகரித்துள்ளனர்.

“கடந்த பத்தாண்டுகளில் அவர் அத்துமீறிய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அடிபணிய வேண்டிய நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளார்,” என விமர்சித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ராஜாக்கள் ஆட்சி செய்த போது புதிய ராஜாவுக்கு ராஜபட்டாபிஷேகம் செய்யும் வேளையில் அவரது கையில் செங்கோல் கொடுப்பார்கள். புதிய அரசாட்சி தொடங்கியதற்கு அதுதான் அடையாளம்.

பாஜக ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு என புதிய கட்டடம் கட்டப்பட்டது.

அதன் திறப்பு விழா கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. அப்போது தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஆதீனங்கள் கைகளிலிருந்து செங்கோலை வாங்கி அதை அவையின் நடுவே பிரதமர் மோடி நிறுவினார்.

இந்தச் செங்கோல் நாடு சுதந்திரம் அடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவால் ஜவகர்லால் நேருவிடம் வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்