வாஷிங்டன்: தமிழ்நாட்டின் தேனியில் பிறந்தவரான ரினி சம்பத், 31, அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசி மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதன்மூலம் அத்தேர்தலில் போட்டியிடும் முதல் தெற்காசியப் பெண் எனும் பெருமையை ரினி பெற்றுள்ளார்.
அரசாங்க ஒப்பந்ததாரரான இவர், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர். ‘அடிப்படையைச் சரிசெய்வோம்’ எனும் முழக்கத்துடன் களமிறங்கியுள்ள இவர், ‘ஒரு புதிய கொலம்பிய மாவட்டத்தை’ (டிசி) உருவாக்கப் போவதாக உறுதியளித்துள்ளார்.
தமது ஏழாவது வயதில் தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த இவர், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வாஷிங்டன் டிசியில் வசித்து வருகிறார்.
“நான் ஓர் அரசியல்வாதி அல்லள். சிறப்புநலன் சார்ந்த எந்தக் குழுக்களுடனும் எனக்குத் தொடர்பில்லை. நம் நகரின் அடிப்படைச் சேவைகளைச் சரிசெய்ய ஓயாது சிந்தித்துவரும் ஒரு வெளியாளுக்கான நேரம் இது,” என்று ரினி தமது பிரசார இணையப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“அமெரிக்காவில் கனவைத் தேடிவந்த நான், இப்போது வாஷிங்டன் டிசி மக்களின் தேவைகளுக்காகப் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமெரிக்கப் பொருளியலில் தெற்காசியச் சமூகம் முக்கியப் பங்களித்தாலும், அமெரிக்க அரசாங்கத்தில் அச்சமூகத்தின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. இப்போது, மேயர் தேர்தலில் நான் போட்டியிடுவது மற்றவர்களுக்கும் ஓர் உந்துதலாக இருக்கும்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் ஜூன் 16 ஆம் தேதி வாஷிங்டன் டிசியில் முதன்மைத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் மேயர் தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் எனச் சொல்லப்படுகிறது.
கடந்த 1975ஆம் ஆண்டிலிருந்து வாஷிங்டன் டிசிக்கு மேயர் தேர்தல் நடைபெற்று வருகிறது. அப்போதுமுதல் ஜனநாயகக் கட்சியே வெற்றிபெற்று வந்துள்ளது.

