புதுடெல்லி: நாடு முழுவதும் மின்சார உற்பத்திக்கு எனச் சிறிய அளவிலான நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 2,585 கோடி நிதி வழங்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம், 21,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வது அரசின் இலக்கு என்றும் நாடு முழுவதும் சிறிய நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏற்ப 7,133 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அரசு கூறியுள்ளது.
தற்போதைய நிலையில், 1,196 இடங்களில் சுமார் 5,100 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் சிறிய நீர் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்பாட்டில் இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் தெரிவித்தார்.
“1,500 மெகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில், புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய அணைகள் கட்டாமலும் மக்களை இடமாற்றம் செய்யாமலும் ஏற்கெனவே பாய்ந்து கொண்டிருக்கும் ஆற்றில் சிறிய அளவிலான நீர் மின் உற்பத்தி மேற்கொள்வது திட்டத்தின் நோக்கமாகும்.
“எதிர்வரும் 2030-31 வரை ஐந்து ஆண்டு காலத்துக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த நீர் மின் உற்பத்தித் திட்டம் ஏறக்குறைய ரூ.15,000 கோடி முதலீட்டை ஈர்க்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது,” என்றார் திரு அஸ்வினி வைஷ்ணவ்.
புதிய திட்டத்தைச் செயல்படுத்த, முதற்கட்டமாக ஒரு மெகா வாட் முதல் 25 மெகா வாட் வரை மின் உற்பத்தித் திறனுடன் கூடிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு இந்திய அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கத் திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.
அதேபோல் வடகிழக்கு மாநிலங்களில் திட்ட மதிப்பில் 30 விழுக்காடு நிதியை இந்திய அரசு வழங்கும்.

