மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் போதைப்பொருளை ஒழிக்க இலக்கு: அமித்ஷா

2 mins read
52942161-4b87-4479-a2fe-23ad21fcb0fa
போதைப்பொருள் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் வருங்கால சந்ததியைச் சீரழிப்பதற்கான சதித்திட்டம் என்று அவர் சாடினார். - படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: போதைப்பொருளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் முற்றிலுமாக ஒழிக்க வேண்டுமென இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் நடந்த போதைப்பொருள் ஒழிப்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒன்பதாவது உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, போதைப்பொருள் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தற்போது போதைப்பொருள் பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா தனது போரைத் தொடங்கி உள்ளதாகவும் இப்பிரச்சினைக்கு எதிராக மூன்றாண்டுகால கூட்டுப் பிரசாரத்தை அனைவரும் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

போதைப்பொருள் பிரச்சினை என்பது ஒரு நாட்டின் வருங்கால சந்ததியைச் சீரழிப்பதற்கான சதித்திட்டம் என்று அவர் சாடினார்.

எனவே, போதைப்பொருளுக்கு எதிரான அரசின் போராட்டங்கள் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல என்றும் கடுமையான தேசியப் பிரச்சினை என்றும் அமைச்சர் அமித்ஷா சுட்டிக்காட்டினார்.

கடந்த 11 ஆண்டுகளில் போதைப்பொருளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தியா கணிசமான அளவில் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“போதைப்பொருளை ஒழிக்க 2026 மார்ச் 31ஆம் தேதி முதல் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்தப் பிரச்சினைக்கு மூன்று ஆண்டு கால கூட்டுப் பிரசாரத்தைத் தொடங்குவோம்.

“இளையர்களின் உடல்நலம், அவர்கள் சிந்திக்கும் ஆற்றல், செயலாற்றும் திறன் ஆகியவற்றுடன் நேரடித் தொடர்புண்டு. போதைப்பொருள் இவற்றை அழித்து இளையர்களின் வாழ்க்கையைச் சீரழித்துவிடும்.

“இதையடுத்தே, கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியா போதைப்பொருள்களுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது,” என்றார் அமித்ஷா.

குறிப்புச் சொற்கள்