புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவன விமானம் ஜூன் 12ஆம் தேதி விபத்துக்குள்ளானது. இதில் ஏராளமானோர் உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி தொகையை இழப்பீடாக அறிவித்துள்ளது டாடா குழுமம். அக்குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் இதை அறிவித்தார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கும், விபத்தில் சேதமடைந்த மருத்துவ மாணவர் விடுதியை மீண்டும் கட்டித்தரவும் நிச்சயமாக உதவி அளிக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
“இந்தத் துயரமான தருணத்தில் எங்களுடைய சோகத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை,” என்று தமது எக்ஸ் தளப் பதிவில் சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த அனைவரும் முழுமையாக குணமடையும் வரை அவர்களுக்கான ஆதரவும் உதவியும் கிடைப்பதை டாடா குழுமம் உறுதி செய்யும் என்றும் அனைத்து மருத்துவச் செலவுகளும் ஏற்கப்படும் என்றும் அக்குழுமம் தெரிவித்துள்ளது.
முப்பது நொடிகளில் கீழே விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானம்
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் இருந்து மேலெழுந்து பறக்கத் தொடங்கிய 30 நொடிகளுக்குள் விமான நிலைய தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இத்தகவலை விமான கண்காணிப்புத் தளமான Flightradar 24 தெரிவித்துள்ளது. கீழே விழுவதற்கு முன்பு அந்த விமானம் சுமார் 625 அடி உயரத்தில் இருந்ததாகவும் அதன் பின்னர் மிக வேகமாக அது கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாகவும் தெரிகிறது.
விமானத்தில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால்தான் தலைமை விமானி ‘மே டே’ என்ற அவசர குறிப்பை தரைக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பினாரா என்பது ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், ஓடுபாதையில் இருந்து அந்த விமானம் புறப்பட்டு மேலெழுந்து செல்வதும் அடுத்த சில நொடிகளிலேயே அது விமான நிலையம் அருகே தரையிறங்குவதும் காணொளியாக வெளியாகி பார்ப்பவர்களின் மனதை உறையச் செய்கிறது.
அதிக எரிபொருள்: தீயை அணைக்க போராட்டம்
விமானத்தில் லண்டன் வரை செல்வதற்கான எரிபொருள் நிரப்பப்பட்டிருந்தது. அதனால்தான் விமானம் கீழே விழுந்ததும் அது வெடித்துச் சிதறியதாகக் கூறப்படுகிறது.
ஒருவேளை, தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டிருந்தால் எரிபொருள் குறைவாக இருந்திருக்கும் என்றும் உயிர்ச்சேதம் குறைந்திருக்கும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏர் இந்தியா விமானத்தில் லண்டன் வரை செல்ல அதிகபட்சமாக 60 டன் எரிபொருள் நிரப்பப்பட்டிருக்கலாம் என்றும், அதனால்தான் தீயை அணைக்கப் போராட வேண்டியுள்ளது என்றும் ஊடகச் செய்திகள் தெரிவித்தன.