ரயில்வே உதிரி பாகங்களைத் தயாரிக்கும் டாடா - ஸ்கோடா

2 mins read
c80cb981-265f-4a8c-8930-4b6231fc6a55
டாடா - ஸ்கோடா கூட்டு நிறுவனம் மூலம் இந்தியாவிற்குப் பல மில்லியன் யூரோ முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: வாகன பாகங்கள் தயாரிக்கும் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனமும் ஸ்கோடா குழுமமும் இணைந்து ரயில்வே உதிரி பாகங்களைத் தயாரிக்கும் கூட்டு நிறுவனம் ஒன்றை இந்தியாவில் அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளன.

இதன்மூலம் இந்தியாவிற்கு பல மில்லியன் யூரோ முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ந்துவரும் இந்திய ரயில்வே, வாகனச் சந்தைக்கு இந்தப் பங்காளித்துவம் ஆதரவளிக்கும் என்று டாடா ஆட்டோகாம்ப் நிறுவனம் புதன்கிழமை (ஜூலை 9) ஓர் அறிக்கைமூலம் தெரிவித்தது.

பொதுப் போக்குவரத்து வாகனங்கள், உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஐரோப்பாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஸ்கோடா திகழ்கிறது. மாறாக, மின்வாகனங்களுக்குத் தேவையான உந்துவிசை அமைப்புகள், பாகங்களுக்கான சந்தையில் டாடா ஆட்டோகாம்ப் குறிப்பிடத்தக்க பங்கை வகித்து வருகிறது.

டாடா ஆட்டோகாம்ப் - ஸ்கோடா இணைந்து உருவாக்கும் கூட்டு நிறுவனம் மித அதிவேக ரயில்கள், மெட்ரோ ரயில்கள், இலகு ரயில்கள் போன்றவற்றுக்கான உதிரி பாகங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தும்.

“தயாரிப்புப் பணிகள் இந்தியாவிலேயே இடம்பெறும். பல மில்லியன் யூரோ முதலீட்டில் அந்தக் கூட்டு நிறுவனம் அமைக்கப்படும். அதன்மூலம் இவ்வட்டாரத்திற்குப் பொருளியல், தொழில்நுட்பம் சார்ந்த நன்மைகள் விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்துரைத்த டாடா ஆட்டோகாம்ப் துணைத் தலைவர் அரவிந்த் கோயல், “ஸ்கோடா குழுமத்துடன் கைகோத்திருப்பது இந்திய ரயில்வே, மெட்ரோ துறையில் நாங்கள் வலுவாகத் தடம்பதிக்க உதவும். அதன்மூலம் அதிநவீன மின்சார உந்துவிசைக் கருவிகளையும் பாகங்களையும் தயாரிக்க முடியும்,” என்றார்.

“டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீனத் தொழில்நுட்பத்தையும் வல்லமையையும் இந்தியாவிற்குக் கொண்டுவருகிறோம்,” என்று ஸ்கோடா குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் நொவோத்னி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்