புதுடெல்லி: இந்தியாமீது விதிக்கப்பட்டிருந்த வரிகளை 50 விழுக்காட்டில் இருந்து 18 விழுக்காடாகக் குறைக்கும் முக்கிய நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட இடைக்கால வணிக ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இந்தியாமீது அமெரிக்கா 25 விழுக்காடு அபராத வரி விதித்திருந்தது. தற்போது அந்த வரியை ரத்து செய்யும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
எனினும், இந்தியா மீண்டும் ரஷ்ய எண்ணெய்யை வாங்கினால் வரிகள் விதிக்கப்படும் என்றும் அதற்கு மாற்றாக அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்றும் வெள்ளை மாளிகை வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பயனாக, இந்தியா மீது 50 விழுக்காடாக இருந்த மொத்த வரி தற்போது 18 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்திய வணிக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தமது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இந்த இடைக்கால ஒப்பந்தமானது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாகக் குறு, சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இந்தியச் சந்தையில் 30 டிரில்லியன் டாலர் அளவுக்கு பயனளிக்கும். இந்தியப் பொருள்களுக்கு அமெரிக்கா 18 விழுக்காடு இறக்குமதி வரியை விதிக்கும்.
“அதேவேளையில், அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் தானியக் கழிவுகள், கால்நடைத் தீவனங்கள், வேளாண் பொருள்களுக்கான வரிகள் குறைக்கப்படும்,” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கப்பட்டால் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப் பாகங்களுக்கு விலக்கு அளிக்கவும் அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 500 பில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்காவிலிருந்து எரிசக்தி மற்றும் தொழில்நுட்பப் பொருள்களை இறக்குமதி செய்யவும் இந்தியா ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த ஒப்பந்தம் இருநாட்டுப் பொருளியல் உறவுகளிலும் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

