இந்தியாவுக்கான வரி விலக்கு: அமெரிக்கா விளக்கம்

இந்தியாவுக்கான வரி விலக்கு: அமெரிக்கா விளக்கம்

கோப்புப் படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

19 Oct 2026 - 4:45 pm

2 mins read

புதுடெல்லி: ஒரே இரவில் ரஷ்ய எரிசக்தி ஆதாரங்களில் இருந்து முற்றிலும் விலகுவது இந்தியாவைப் பொறுத்தவரை சாத்தியமற்றது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு அறுபது நாள்கள் வரிவிலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது அமெரிக்கா. இதற்கான பின்னணியை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ விளக்கியுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்கீழ், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா போன்ற முக்கிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு 100 விழுக்காடு வரை வரிவிதிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இந்த வரிகளுக்குத் தற்காலிக விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளார்.

உஸ்பெகிஸ்தான், இந்தியப் பயணத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மார்க்கோ ரூபியோ, இந்த அறுபது நாள்களுக்கான தளர்வுக் காலத்தைப் பயன்படுத்தி, தடைகள், வரிகள், உலகப் பொருளியல், அமெரிக்கப் பொருளியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்ய அதிபர் டிரம்ப் விரும்புவதாகத் தெரிவித்தார்.

உலக அளவில் எரிசக்தி விநியோகத்தில் தொடர் அழுத்தங்கள் நிலவி வருவதாகக் குறிப்பிட்ட திரு மார்க்கோ ரூபியோ, அமெரிக்கா-ஈரான் மோதல், செங்கடலில் ஹூதி தாக்குதல்கள், ரஷ்யா-உக்ரேன் போர் ஆகியவற்றால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய சூழலில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளை மாற்றியமைக்கத் தொடங்கியிருந்தாலும், இப்போதும் ரஷ்யாவிடம் இருந்தே பெருமளவிலான எண்ணெய்யைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

“இந்தியா, அமெரிக்காவின் மிக முக்கியமான கூட்டாளி நாடு என்பதால், உலகளாவிய நிலைமையை ஆராய்ந்து சரியான முடிவை எடுக்க இந்த அவகாசம் அவசியம்,” என்றார் திரு ரூபியோ.

கடந்த 2022ல், ரஷ்யா-உக்ரேன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யா வழங்கிய தள்ளுபடி விலையிலான கச்சா எண்ணெய்யை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்யத் தொடங்கியது. தற்போது இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு சுமார் 35 விழுக்காடாக உள்ளது.

இந்தியாவில் உள்ள 140 கோடி குடிமக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப வர்த்தக நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு, ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாசீனாஅமெரிக்காஎரிசக்திகச்சா எண்ணெய்அதிபர்டோனல்ட் டிரம்ப்உக்ரேன்போர்