தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களுக்கான வரி குறையக்கூடும்: ஜிஎஸ்டியில் மாற்றம் வரலாம்

1 mins read
6b2abba4-6d22-4314-b8f9-caaf7462465f
ஜிஎஸ்டியின் 56ஆவது கூட்டத்தில்தான் வரி குறைப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் அத்தியாவசியப் பொருள்களுக்கான வரியைக் குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுமக்களின் வரிச்சுமையைக் குறைக்க, சில பொருள்கள் மீதான

வரியை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை மூலம், நெய், சோப்பு, தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசின் இந்த வரி குறைப்பு நடவடிக்கையானது, அமலுக்கு வந்தால், அது குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நற்செய்தியாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில பொருள்களுக்கான சரக்கு, சேவை வரியின் நிலைகளில் மாற்றம் செய்யப்படலாம். இதன் மூலம் வரிவிகிதம் குறைக்கப்படும் அல்லது முற்றிலுமாக நீக்கப்படும் வாய்ப்புள்ளது.

விகிதம் குறைக்கப்படுவதால் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும். எனினும், ஜிஎஸ்டியின் 56ஆவது கூட்டத்தில்தான் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த சில மாதங்களில், சில மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கின்றன.

எனவே, அதற்கு முன்பாக அத்தியாவசியப் பொருள்களின் விலையைக் குறைத்து விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு விரும்புவதாகக் கூறப்படுகிறது.

மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி மன்றம், வரிவிகிதங்களில் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைப்பார்கள் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்