புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் டாக்சி, ஆட்டோ வாகன ஓட்டுநர்கள் சங்கம் மூன்று நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கி உள்ளது.
பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், டெல்லியில் வாடகைக் கார்களுக்கான பயணக் கட்டணங்களையும் உயர்த்த வேண்டும் என்று ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அந்தக் கோரிக்கையை வலியுறுத்தித் தொடங்கப்பட்டுள்ள போராட்டம் சனிக்கிழமை (மே 23) வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டணங்களை உயர்த்தக் கோரி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பு டெல்லி துணைநிலை ஆளுநர் தரண்ஜித் சிங் சந்து, முதல்வர் ரேகா குப்தா ஆகியோருக்குக் கடந்த திங்கட்கிழமை (மே 18) கடிதம் எழுதியிருந்தது.
“மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல் சூழல் தணியும் அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அதனால் உலகம் முழுவதும் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
“அதன் தாக்கத்திலிருந்து இந்தியாவும் தப்பவில்லை. கடந்த சில நாள்களில் பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகியவற்றின் விலைகள் இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளன,” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தம் 68 போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், டெல்லியில் டாக்சி, வாடகை வாகனப் போக்குவரத்து அடியோடு சீர்குலைந்துவிட்டது.
அந்தத் தொழிற்சங்கங்களில் ஒன்றான சாலக் சக்தி தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர் அனுஜ் குமார் ரத்தோர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சிஎன்ஜி’ எரிவாயுக் கட்டணம் பலமுறை உயர்ந்தபோதிலும் டாக்சி பயணக் கட்டணங்கள் 15 ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை. அரசாங்கம் எங்களது கோரிக்கையைக் கேட்க மறுக்கிறது,” என்றார்.

