மும்பை: வெறும் 400 மீட்டர் பயணத்திற்குக் கட்டணமாக அமெரிக்கச் சுற்றுப்பயணி ஒருவரிடம் 18,000 ரூபாய் (S$250) வசூலித்த டாக்சி ஓட்டுநரை மும்பைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கினார் அந்த அமெரிக்கர். அங்கே அவரைத் தமது டாக்சியில் ஏற்றிய தேஷ்ராஜ் யாதவ், 50, என்ற டாக்சி ஓட்டுநர், அருகிலிருந்த ஐந்து நட்சத்திரத் தங்குவிடுதியில் அவரை இறக்கிவிட்டதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) தெரிவித்தது.
இவ்வளவு செலவுமிக்க பயணம் குறித்து அந்தப் பெண் சுற்றுப்பயணி சமூக ஊடகத்தில் பதிவிட்டதை அடுத்து, அந்த ஓட்டுநரின் ஏமாற்று வெளிச்சத்திற்கு வந்தது.
“அண்மையில் மும்பையில் தரையிறங்கினேன். அங்கிருந்து ஹில்டன் ஹோட்டலுக்கு டாக்சி பிடித்தேன். டாக்சி ஓட்டுநரும் அதிலிருந்த இன்னொருவரும் முதலில் இன்னோர் இடத்திற்குக் கூட்டிச் சென்று, என்னிடம் 200 டாலர் (ரூ.18,000) பெற்றுக்கொண்டனர். பின்னர் ஹோட்டலில் இறக்கிவிட்டனர். விமான நிலையத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில்தான் அந்த ஹோட்டல் அமைந்துள்ளது,” என்று அர்ஜென்டினா அரியானோ என்ற அந்தப் பெண் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட டாக்சியின் பதிவெண்ணையும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையறிந்த காவல்துறை, இவ்வாரத் தொடக்கத்தில் தானாக முன்வந்து வழக்கு பதிந்து, மூன்று மணி நேரத்திற்குள் யாதவைப் பிடித்தது. ஆயினும், அரியானோவை அவர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்தேரி கிழக்குப் பகுதி வழியாக 20 நிமிட நேரத்திற்கு அரியானோவைக் கூட்டிச் சென்றதாகவும் பின்னர் அதே வழியில் திரும்பி அவரை ஹோட்டலில் இறக்கிவிட்டதாகவும் விசாரணையின்போது யாதவ் கூறினார்.
யாதவின் கூட்டாளியைக் காவல்துறை தேடி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியக் குற்றவியல் சட்ட விதிகளின்கீழ் யாதவ்மீது வழக்கு பதிந்து, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக அந்தக் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

