‘ஏஐ’ துறையில் தடம் பதிக்கும் டிசிஎஸ்: 8,900 பொறியாளர்களுடன் புதிய திட்டம்

‘ஏஐ’ துறையில் தடம் பதிக்கும் டிசிஎஸ்: 8,900 பொறியாளர்களுடன் புதிய திட்டம்

2 mins read
92ffd533-3301-4b86-9392-fdd16cebb91a
திறமையான ஊழியர்களை உருவாக்குவதற்காக டிசிஎஸ் நிறுவனம் ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: வேலை வாய்ப்புகளைச் சீர்குலைக்கும் என்ற கருத்துக்கு மாறாக, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது புதிய வணிகத்தை உருவாக்கும் என்று டாடா கன்சல்டன்சி (டிசிஎஸ்) நிறுவனம் நம்பிக்கை தெரிவித்தது.

இதற்காகச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சியுடைய 8,900 பொறியாளர்களைக் கொண்ட குழுவை உருவாக்கி வருவதாக அந்நிறுவனத்தின் இரு நிர்வாகிகள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறியது.

மேலும், சேவைத் துறையைச் சீர்குலைக்கக்கூடும் என்ற முதலீட்டாளர்களின் கவலைக்கு மத்தியில் இந்தப் புதிய உத்தி குறித்த தகவல்களை டிசிஎஸ் முதன்மைச் செயலதிகாரி கே. கிருதிவாசன், தலைமை நிதி அதிகாரி சமீர் செக்சாரியா ஆகியோர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளனர்.

டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்தப் பணியாளர்களில் 1 முதல் 1.5 விழுக்காடு வரையிலான ஊழியர்களை இந்தச் சிறப்புப் பிரிவில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக திரு கிருதிவாசன் தெரிவித்தார்.

ஜூன் மாத இறுதி நிலவரப்படி, இது ஏறக்குறைய 5,900 முதல் 8,900 ஊழியர்களைக் குறிக்கும் என்றும் இந்தத் தொழில்நுட்ப வல்லுநர்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக இணைந்து, அவர்களின் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப ‘ஏஐ’ கருவிகளை வடிவமைத்து வழங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை ‘ஓபன் ஏஐ’ (Open AI), மைக்ரோசாஃப்ட் போன்ற உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் போட்டியாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

‘ஏஐ’ வருகையால் இந்தியாவின் 315 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஐடி துறைக்கு ஆபத்து என்ற வாதத்தை நிராகரித்துள்ளார் திரு கிருதிவாசன்.

“வாடிக்கையாளர்களின் தேவைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு, பல்வேறு ஏஐ மாதிரிகளை அவர்களின் தற்போதைய அமைப்புகளோடு ஒருங்கிணைக்க டிசிஎஸ் போன்ற கூட்டாளிகள் எப்போதும் தேவை,” என்றும் அவர் கூறியுள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

திறமையான ஊழியர்களை உருவாக்குவதற்காக டிசிஎஸ் நிறுவனம் ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

“செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த நிறுவனங்களுக்கு டிசிஎஸ் போன்ற கூட்டாளிகள் எப்போதும் தேவை. இதைச் செயல்படுத்துவதற்கு வாடிக்கையாளர் சூழலைப் பற்றிய ஆழ்ந்த அறிவு தேவை. அங்குதான் டிசிஎஸ் தனித்து நிற்கிறது. அடிப்படையில் நாங்கள் கட்டமைத்துள்ள திறமைசாலிகளின் கூட்டமைப்பே இதற்குக் காரணம்,” என்று கிருத்திவாசன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
டாடாவேலைவாய்ப்புதொழில்நுட்பம்ஏஐசெயற்கை நுண்ணறிவுமுதலீடுமைக்ரோசாஃப்ட்பொறியாளர்