கோல்கத்தா: தன் மகள்மீது கொண்டிருந்த அளவற்ற அன்பாலும் அவரது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வேட்கையாலும் தேநீர் வணிகர் ஒருவர் செய்த செயல் இணையவாசிகளின் நெஞ்சைத் தொடுவதாக அமைந்தது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மிட்னாபூர் அருகே உள்ள மௌலா எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் பச்சு சௌதரி.
இவர் கடந்த சனிக்கிழமை (நவம்பர் 8) மிட்னாபூரில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்திற்குச் சென்றார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறுக சிறுகச் சேகரித்த நாணயங்கள் அடங்கிய குடத்தையும் அவர் தம்முடன் எடுத்துச் சென்றார்.
அங்கிருந்த ஊழியர்களிடம் சென்று, தவணை முறையில் ஸ்கூட்டர் வாங்க இயலுமா எனக் கேட்டார் திரு சௌதரி. அதற்கு, முடியும் என அவர்களும் கூறினர்.
திரு சௌதரி அடுத்ததாகக் கேட்ட கேள்விதான் அவர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஸ்கூட்டருக்கான பணத்தை நாணயங்களாகப் பெற்றுக் கொள்வீர்களா என்பதுதான் அந்தக் கேள்வி.
அதற்கும் அவர்கள் இணங்க, காத்திருந்தது அதிர்ச்சி!
திரு சௌதரி கொண்டுவந்திருந்த நாணயங்கள் அடங்கிய பெரிய குடத்தைக் கண்டு அவர்கள் மலைத்துப்போயினர். ஊழியர்கள் எட்டுப் பேர் சேர்ந்து அதனைத் தூக்கி, தரையில் கொட்டினர்.
குடத்திலிருந்த நாணயங்கள் அனைத்தும் பத்து ரூபாய் மதிப்புடையவை. அவற்றை எண்ணி முடித்தபோது, பத்து ரூபாய் நாணயங்களாக மட்டும் ரூ.69,000 (S$1,015) இருந்தது. குடத்தில் பணத்தாள்களும் இருந்தன. மொத்தத்தில், நாணயங்களாகவும் பணத்தாள்களாகவும் அக்குடத்தில் ரூ.110,000 (S$1,617) இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சில ஆண்டுகளுக்குமுன் தம் இளைய மகள் ஸ்கூட்டர் வாங்கித் தரும்படி கேட்டார் என்றும் அப்போது, அவரது ஆசையைத் தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்றும் திரு சௌதரி கூறினார்.
அதனைத் தொடர்ந்து, தனது குறைந்த வருமானத்திலும் சிறுக சிறுக சேமிக்கத் தொடங்கியதாக அவர் சொன்னார்.
திரு சௌதரி கொண்டுவந்த குடத்திலிருந்த பணத்தை எண்ணி முடிக்க இருசக்கர வாகன விற்பனை நிலைய ஊழியர்களுக்குக் கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் ஆனது.

