பெங்களூரு: ஆறாம் வகுப்பு மாணவனைப் பிரம்பால் அடித்து, அவனது பல்லை உடைத்ததாக ஆசிரியை ஒருவர்மீது இந்தியாவின் பெங்களூரு நகரக் காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.
அங்குள்ள ஹோலி கிறிஸ்டியன் ஆங்கிலப் பள்ளியில் கடந்த வியாழக்கிழமையன்று (நவம்பர் 7) இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
மாணவர்கள் ஒருவர்மீது ஒருவர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து விளையாடிக்கொண்டிருந்தபோது, வகுப்பறைக்குள் நுழைந்த அஸ்மத் என்ற இந்திப் பாட ஆசிரியையின் ஆடைமீது தண்ணீர் தெறித்ததாகச் சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அஸ்மத், அம்மாணவனைப் பிரம்பால் அடித்ததில் அவனது பல் உடைந்துபோனதாகக் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை கூறுகிறது.
சம்பவம் தொடர்பில் அம்மாணவனின் தந்தை காவல்துறையில் புகாரளித்தார். ஆயினும், ஆசிரியை அஸ்மத் கைதுசெய்யப்பட மாட்டார் என்று மூத்த காவலர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அதே பள்ளியைச் சேர்ந்த இன்னோர் ஆசிரியர் தம்முடைய ஆறு வயது மகளை அடித்ததில் அவளது கை ஒரு வாரத்திற்கு வீங்கிப்போனதாக அவர் கூறினார். அதன் தொடர்பில், பள்ளி நிர்வாகம் வருத்தம் தெரிவித்து, தம்மிடம் மன்னிப்புக் கடிதம் வழங்கியதாகவும் அவர் சொன்னார்.
“இம்முறை, பள்ளி உரிமையாளரைத் தொடர்புகொண்டு, என் மகனின் பல்லை உடைத்தது குறித்து காவல்துறையில் புகாரளிக்க இருப்பதாகக் கூறினேன். அவரும் சரி என்றார். பள்ளி ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கின்றனர். என்ன நடந்தது என்ற உண்மை எனக்குத் தெரிய வேண்டும்,” என்றார் அம்மாணவனின் தந்தை.
இந்நிலையில், ஆசிரியை அடித்ததால் அம்மாணவனின் பல் உடையவில்லை என்று பள்ளி நிர்வாகத் தலைவர் அர்பிதா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அஸ்மத் உடைந்த அளவுகோலால் மாணவனை அடிக்க கையை உயர்த்தியபோது அவன் தப்பிக்க முயன்றதாகவும் அப்போது அவனது முகம் அருகிலிருந்த மேசையில் இடித்துக்கொண்டதால் பல் உடைந்துபோனதாகவும் அவர் விளக்கினார்.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்திய காவல்துறை, ஒட்டுப்பட்டையால் ஒட்டப்பட்டிருந்த பிரம்பு ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.