ஜான்சி: வகுப்பில் பாடம் எடுக்க வேண்டிய ஆசிரியர் தனது கைப்பேசியில் ஆபாசப் படம் பார்த்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
தான் ஆபாசக் காணொளி பார்ப்பதைப் பார்த்துவிட்ட எட்டு வயது மாணவனை அந்த ஆசிரியர் அடித்து உதைத்தது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.
குல்தீப் யாதவ் என்ற அந்த ஆசிரியர் ஆபாசக் காணொளி பார்ப்பதைக் கண்டு அந்த இரண்டாம் வகுப்பு மாணவன் சிரித்ததாகக் கூறப்படுகிறது. அதனால் ஆத்திரமடைந்த குல்தீப் அவனை அடித்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
“அந்த ஆசிரியர் என் மகனின் தலைமுடியைப் பிடித்து, அவனது தலையைச் சுவரில் முட்டச் செய்தார். அதனால், அவனது காதில் காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவனை இழிசொற்களால் திட்டிய ஆசிரியர், பிரம்பாலும் அவனை அடித்துள்ளார். அதன் தொடர்பில் காவல்துறையில் புகார் அளித்துள்ளேன்,” என்று அச்சிறுவனின் தந்தை ஜெய்பிரகாஷ் விவரித்தார்.
அவரது புகாரின் அடிப்படையில், ஆசிரியர் குல்தீப்மீது காவல்துறை வழக்கு பதிந்து, அவரைக் கைதுசெய்து விசாரித்து வருகிறது.