மும்பை: கையெழுத்து மோசமாக இருந்ததால் எட்டு வயதுச் சிறுவனின் கையை மெழுகால் சூடுவைத்த துணைப்பாட ஆசிரியர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 28) இந்தியாவின் மும்பை மாநகரின் மாலாட் பகுதியில் நிகழ்ந்தது.
முகம்மது ஹம்ஸா கான் என்ற அச்சிறுவன், அங்குள்ள லக்ஷதம் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். அவன் ராஜ்ஸ்ரீ ரத்தோர் என்ற அந்த ஆசிரியையின் வீட்டில் நாள்தோறும் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை துணைப்பாட வகுப்பிற்காகச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், சம்பவ நாளன்று இரவு 9 மணியளவில் ஹம்ஸா அழுதுகொண்டே இருப்பதாகவும் உடனே வந்து அவனை அழைத்துச் செல்லுமாறும் அவனுடைய தந்தை முஸ்தாகீன் கானிடம் தொலைபேசி வழியாக ராஜ்ஸ்ரீ கூறினார்.
வீட்டிற்குத் திரும்பியபின், தனது கையெழுத்து மோசமாக இருந்ததால் எரியும் மெழுகுவத்தியின்மீது ஆசிரியை தனது கையை வைத்ததாக ஹம்ஸா தன் தந்தையிடம் சொன்னான். அதனால் அவனது உள்ளங்கையில் கடுமையான தீக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஹம்சாவை அவனுடைய தந்தை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். பின்னர் அவன் பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
திரு முஸ்தாகீன் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்ஸ்ரீமீது காவல்துறை வழக்கு பதிந்தது. விசாரணை தொடர்வதாகக் காவல்துறை தெரிவித்தது.