தேர்வுத்தாள் கசிந்ததால் மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

தேர்வுத்தாள் கசிந்ததால் மகாராஷ்டிராவில் ஆசிரியர் தகுதித் தேர்வு ஒத்திவைப்பு

2 mins read
9357e9ab-87f3-4bbb-b294-7dc59ade72bb
மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. - படம்: இந்தியா டுடே

மும்பை: மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு, வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை புனேவில் உள்ள மகாராஷ்டிர மாநிலத் தேர்வுக் குழு (எம்எஸ்சிஇ) வெளியிட்டுள்ளது.

தானே மாவட்டத்தில் சிலரிடமிருந்து இந்தத் தேர்வு தொடர்பான கேள்விகள் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து, தேர்வுத்தாள் கசிந்துள்ளதாகக் கடுமையான புகார்கள் எழுந்தன.

இதன் பின்னரே தேர்வு ஒத்திவைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கேள்விகள் அடங்கிய தாள், உண்மையான தேர்வுத்தாளா, மாதிரி வினாத்தாளா என்பதைக் கல்வித்துறை தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்தச் சரிபார்ப்பு முடிந்தபிறகே அடுத்தகட்ட இறுதி முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சனிக்கிழமை (ஜூன் 27) காலை பிவாண்டி பகுதியில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின்போது மகாராஷ்டிர மாநிலத் தேர்வுக் குழுவின் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய நபர்களிடம் இருந்த சில கேள்விகள், தேர்வுக்காகத் தயாரிக்கப்பட்ட கேள்விகளுடன் ஒத்துப்போவது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது பிவாண்டி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாள் கசிந்ததன் பின்னணி மற்றும் இதில் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்துக் காவல்துறை தீவிரமாக விசாரித்து வருகிறது.

“தேர்வை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்துவதே எங்களின் நோக்கம். புகார்களின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த தேர்தல் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுகிறது,” என்று மகாராஷ்டிர மாநிலத் தேர்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

கைப்பற்றப்பட்ட தாள்கள் உண்மையான தேர்வுத்தாள்தான் என்பது உறுதியானால், இந்தத் தேர்வை முழுமையாக ரத்து செய்வது குறித்தும் கல்வித்துறை ஆலோசிக்கும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
வினாத்தாள்தேர்வுத்தாள்ஆசிரியர்தேர்வு

தொடர்புடைய செய்திகள்